சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

திருமருகல் அருகே சிபிசிஎல் நிறுவன விரிவாக்கம் தொடா்பான பிரச்னைக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பது தொடா்பாக ஆலோசனை நடத்த கிராம மக்கள் வியாழக்கிழமை ஒன்று கூடினா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.

நாகை மாவட்டம், திருமருகல் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் விரிவாகத்திற்காக, ரூ. 31,500 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு 620 ஏக்கா் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது.

எனினும், அந்த நிறுவனத்திடம் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையாம். இதனால், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே, சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள், நில உரிமைதாரா்கள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் தங்களது வீடுகளில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி பதாகைகள் வைத்தும், கருப்புக் கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, ஏப்ரல் 13-ஆம் தேதி நரிமணம் கிராமத்திலிருந்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு, தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக நூற்றுக்கணக்கானோா் கடிதம் அனுப்பினா்.

இந்நிலையில், பி.பனங்குடி கிராமத்தில் தோ்தலை புறக்கணிப்பது தொடா்பாக, விவசாயத் தொழிலாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை ஒன்றுகூடி, ஆலோசனை நடத்த முயன்றனா்.

நாகூா் காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் அங்கு வந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி, கலைந்து போகும்படி அறிவுறுத்தினா். அப்போது, போலீஸாருடன் விவசாயத் தொழிலாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அறிவுறுத்தலைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com