திருநள்ளாறு, செல்லூர் அரசுப் பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு

திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளியில் புதுச்சேரி அமைச்சர் திடீர் ஆய்வு செய்து, மாணவர்களிடம் உரையாடினார்.

திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளியில் புதுச்சேரி அமைச்சர் திடீர் ஆய்வு செய்து, மாணவர்களிடம் உரையாடினார்.
புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் செல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு செய்தார். வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களின் இருக்கை, மின் விசிறி வசதிகளை அவர் பார்வையிட்டார். மாணவர்களுடன் அமைச்சர் உரையாடினார். ஆசிரியர்கள் போதிப்பு முறைகளையும், வீட்டில் பயிற்சி மேற்கொள்ளும் முறைகளை குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எந்தவித தாழ்வு மனப்பான்மையுமின்றி, சிறந்த கல்வியைப் பெற வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எல்லா வசதிகளையும் அரசு செய்து தருகிறது. குடும்ப சூழலையும், தமது எதிர்கால நலனை உணர்ந்து மாணவர்கள் உச்சமான கல்வியைப் பெற வேண்டும். அரசுப் பள்ளியின் ஆசிரியர்களிடம் உரிய சந்தேகங்களைக் கேட்டு, தமது கல்வி அறிவை மேம்படுத்திக்கொள்ள அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவுரை கூறினார்.
மாணவர்களுக்கு உணவு சமைக்கும் கூடம், மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், கழிப்பறைகளையும் அமைச்சர் பார்வையிட்டார். மாணவர்களுக்குத் தரப்படும் உணவு சுகாதாரமாகவும், சுவையாகவும் இருக்கிறதா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அதோடு குடிநீர், கழிப்பறை வளாகங்கள் சுகாதாரமாக இருக்கவும் பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி, கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளர் கார்த்திகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com