புதுச்சேரி அரசு இயந்திரம் சரியாக செயல்படவில்லை: என். ரங்கசாமி குற்றச்சாட்டு

கஜா  புயல் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகளில் புதுச்சேரி அரசு இயந்திரம்  முறையாக  

கஜா  புயல் மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகளில் புதுச்சேரி அரசு இயந்திரம்  முறையாக  செயல்படவில்லை என புதுச்சேரி சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என். ரங்கசாமி குற்றம்சாட்டினார்.
 காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி சனிக்கிழமை காரைக்கால் வந்தார். கடலோர மீனவ கிராமங்களான காளிக்குப்பம், அக்கம்பேட்டை, கோட்டுச்சேரி மேடு, கீழக்காசாக்குடி மேடு, காரைக்கால் மேடு உள்ளிட்ட  கிராமங்களுக்குச் சென்று புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு மக்களிடம் குறைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
 பின்னர், செய்தியாளர்களிடம் என். ரங்கசாமி கூறியது : காரைக்கால் மாவட்டம் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு நிவாரண நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை. நெடுஞ்சாலையில் கிடந்த மரங்களை மட்டும் வெட்டி அகற்றியுள்ளார்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. வெட்டப்பட்ட மரங்கள் கூட இன்னும் அகற்றப்படவில்லை.
குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். அரசு இயந்திரம் சரியாக செயல்படவில்லை.  மீனவ கிராமங்களில் கடல் அலையால் அடித்துச்  செல்லப்பட்டு ஆங்காங்கே கிடக்கும்  படகுகளைக் கூட அகற்றவில்லை.  புயல் எச்சரிக்கை காரணமாக புயலுக்கு முன்னர் சில நாள்களும், புயல் பாதிப்பால் புயலுக்குப் பின்னர் இதுவரையிலும் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.
  இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் என்பது உடனடியாக கிடைக்க வேண்டும். புதுச்சேரி அரசு உடனடியாக முழுமையான நிவாரணத்தைத் தரவேண்டும்.  இதற்கு இந்த அரசு வேறு யாரையும் குறை சொல்லிக் கொண்டிருந்தால் அர்த்தமில்லை. அரசு இயந்திரம் துரிதமாக செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் முழுமையான நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே என்.ஆர். காங்கிரஸின் நிலைப்பாடு.  மத்திய அரசு உரிய நிவாரண உதவியை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவோம் என்றார்.
   கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வி. பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் அவருடன் காரைக்கால் வந்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com