புயல் காற்றில் விழுந்த மரக்கிளைகள் அகற்றம்

கஜா புயலின் சீற்றத்தால், காரைக்கால் மாவட்டத்தில் விழுந்த மரங்களின் கிளைகள், தழைகள் இதுவரை

கஜா புயலின் சீற்றத்தால், காரைக்கால் மாவட்டத்தில் விழுந்த மரங்களின் கிளைகள், தழைகள் இதுவரை 150 லோடு  அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 200 லோடு அளவில் அகற்றப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்ட சேத வரிசையில் முன்னணியில் இருப்பது மரங்கள். ஏறத்தாழ 2,500 சிறிய, பெரிய  மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதாக அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.  பிரதான போக்குவரத்து மிகுந்த சாலையிலும், பிற சாலைகளிலும் விழுந்த மரங்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் அகற்றி, போக்குவரத்தை சீர்செய்தனர்.
அதேவேளையில், மாவட்டம் முழுவதும் மரங்களை அகற்றுவதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மரக்கிளைகள் சாலையோர சாக்கடை, கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் விழுந்துள்ளதால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காரைக்கால் நகர பகுதியில் மட்டும் 18 வார்டுகளில், "ஹேண்ட் இன் ஹேண்ட்' என்ற திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம், வீடு வீடாகச் சென்று குப்பைகளைப் பெறுகிறது. இந்த நிறுவனத்தினர், குப்பைகள் அகற்றம் மட்டுமன்றி, சாலையோரத்தில் கிடக்கும் மரக்கிளைகள், தழைகளை அள்ளும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தினர் கூறுகையில், நகர பகுதியில் மட்டும் இதுவரை 150 லோடு (ஒரு லோடு என்பது டிராக்டர் அளவு) அள்ளப்பட்டுள்ளது. மேலும், 200 லோடு வரை அகற்ற வேண்டியுள்ளது. இவை அடுத்த 3 நாள்கள் வரை நீடிக்கும் என்றனர்.
நகர பகுதியில் மட்டுமே இவ்வளவு தழைகள், குப்பைகள் என்றால், திருநள்ளாறு, திருப்பட்டினம், நிரவி, கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பிற பகுதிகள், கடலோரப் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு ஆள்பற்றாக்குறை காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது மழையும் பெய்துவருவதால், சாலையோரத்தை சுத்தம் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த பணியை துரிதமாக முடிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், தனியார் நிறுவனத்தினரும் பங்கெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com