காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடி தடைக் காலம் அமல்

காரைக்கால் மாவட்டத்தில் 61 நாள்கள் மீன்பிடி தடைக் காலம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் 61 நாள்கள் மீன்பிடி தடைக் காலம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் 15  முதல் ஜூன் 14- ஆம் தேதி  வரை 61 நாள்கள் ஆழ் கடலில் மீன்பிடிக்க  மத்திய அரசு தடை விதித்துள்ளது.  புதுச்சேரி அரசின் மீன்வளத் துறை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமப் பஞ்சாயத்தார்களுக்கு, தடைக் காலத்தில் படகுகளை கடலுக்குள் இயக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு வழக்கமாக சுமார் 300  விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்லும். ஏற்கெனவே கடலுக்குள் சென்ற படகுகள் ஞாயிற்றுக்கிழமை  இரவு பெரும்பான்மையானவை கரை திரும்பின.  தடை என்கிற விதியை பின்பற்றி படகுகளை இயக்காமல் திங்கள்கிழமை முதல்  முடக்கினர். பெரும்பாலான படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்கள் வரை மீன்களுடன் திரும்புவர். அதன் பிறகு துறைமுகம் மூடப்படும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள ஃபைபர் சிறிய படகுகள் மூலம்  குறுகிய தூரம் சென்று மீன்பிடித்து வருவது தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.  
இந்த தடைக் காலத்தில் படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கவும், மோட்டார் இயந்திரம் புதுப்பிப்பது, வண்ணம் பூசுவது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் மேற்கொள்வர். தடைக் காலத்தில் பெரிய அளவிலான ஏற்றுமதிக்குரிய மீன்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு வராது.  கடலோர மீனவ கிராமங்களில் இருந்து சிறிய ஃபைபர் படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும்போது, மீன்கள் சந்தைக்கு கொண்டு செல்லப்படும். மீன் வரத்து குறைவால் மீன்களின்  விலை கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு மாத காலம் மீன்பிடித் தொழில் முடக்கம் என்பதை விசைப்படகு உரிமையாளர்களைக் காட்டிலும், மீன்பிடித் தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடியது என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே புதுச்சேரி அரசு, மீன்பிடி தடைக்காலத்தின்போது மீனவர்களுக்கு தரக்கூடிய தடைக்கால நிவாரணத்தை தேர்தல் முடிந்தவுடன் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com