வெங்கடேச பெருமாள் கோயில் திருப்பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அடுத்த மாதம் குடமுழுக்கு செய்ய

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அடுத்த மாதம் குடமுழுக்கு செய்ய தேதி நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில்,  திருப்பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 
நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 28 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய கோயில் தனி அதிகாரி கே.ரேவதி தலைமையிலான நிர்வாகம்  தீர்மானித்து பாலாலயம் செய்து பணிகளைத் தொடங்கியது. ஏறத்தாழ ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையே கோயில் வளாகத்தில் இருந்த அலுவலகக் கட்டடத்தை இடித்துவிட்டு, தாயார் சன்னிதி முன்பாக மண்டபம் கட்ட கோயில் நிர்வாகம் முடிவெடுத்து பணிகளைத் தொடங்கியது. போதிய நிதியாதாரம் இல்லாததால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  புரட்டாசி மாதம் கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதாலும், கடந்த 2 ஆண்டுகளாக புரட்டாசி மாதம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் இல்லாதாதலும், மண்டபம் கட்டுமானத்தை பொருட்படுத்தாமல், குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்து, செப்டம்பர் 16-ஆம் தேதி குடமுழுக்கு செய்ய தேதி நிர்ணயம் செய்தது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருப்பணிகளின் தற்போதைய நிலையை சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் பார்வையிட்டார். இவரை சந்தித்த திருப்பணிக் குழுவினர், மண்டபம் கட்டுமானப் பணி உள்ளிட்ட சில பணிகள் நிறைவேற்ற காலதாமதம் ஏற்படும். இந்த பணிகளை செய்து முடித்துவிட்டு குடமுழுக்கு செய்யலாம். எனவே செப்டம்பர் 16-ஆம் தேதி குடமுழுக்கு என உறுதி செய்யப்பட்ட தேதியைத் தள்ளிவைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே, கோயில் தனி அதிகாரி மற்றும் திருப்பணிக்குழுவினரை அழைத்துப் பேச தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com