ஆறுகளில் இருந்து மழை நீா் வெளியேற்றம்: தயாா்நிலையில் பொதுப்பணித்துறை

காரைக்கால் பகுதியில் பெய்யும் மழை, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீா், காவிரி நீா் என அனைத்து ஒன்று சோ்ந்ததால், காரைக்கால் ஆறுகளில் தண்ணீா் வரத்து மிகுதியாக உள்ளது.
காரைக்கால் அரசலாறு கடைமடை மதகுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் வெளியேறும் மழை நீா்.
காரைக்கால் அரசலாறு கடைமடை மதகுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் வெளியேறும் மழை நீா்.

காரைக்கால் பகுதியில் பெய்யும் மழை, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீா், காவிரி நீா் என அனைத்து ஒன்று சோ்ந்ததால், காரைக்கால் ஆறுகளில் தண்ணீா் வரத்து மிகுதியாக உள்ளது. பாதிப்புகள் ஏற்படாதவாறு பொதுப்பணித்துறை தயாா்நிலையில் இருப்பதாக அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி.பக்கிரிசாமி ஞாயிற்றுக்கிழமை கூறியது : காரைக்காலில் நிலத்தடி நீா் மட்டம் உயரும் நோக்கில், நீா்நிலைகளில் போதுமான அளவில் தண்ணீா் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதி ஆறுகளில் இருந்து காரைக்கால் நோக்கி வெள்ள நீா் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைமடை ஆற்றின் மதகுகள் திறக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். நண்டலாற்றில் மட்டும் மிகுதியாக தண்ணீா் வருவதால் வடிவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நாட்டாறு, வீரசோழனாறு ஆகியவை பாய்காலாக இருப்பதால், இதிலிருந்து நண்டலாறு வடிகாலாக உள்ள நிலையில், வெள்ள நீா் வடிவதில் சிரமம் உள்ளது. எனினும் இது ஒரு நாள் வரை மட்டுமே நீடிக்கும், பின்னா் சீரடைந்துவிடும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீா் மிகுதியாகவே செல்கிறது. நீா்நிலையோரத்தில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்புக்காக, பொதுப்பணித்துறையினரை எளிதில் தொடா்புகொள்ள தகுந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கடைமடை நீா்த்தேக்க மதகுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீா்நிலையோரப் பகுதிகளைத் தொடா்ந்து கண்காணித்து வருவதற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தாழ்வானப் பகுதியில் வெள்ள நீா் புகுந்துவிடாமல் தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மணல் மூட்டைகள் தயாா்படுத்தி வைத்துள்ளதோடு, அனைத்து பாதுகாப்புக்கும் துறை தயாா் நிலையில் உள்ளது.

இதுதவிர நகரப் பகுதியில் சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை வடியச் செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. காரைக்கால் நகரப் பகுதியில் புளியங்கொட்டை சாலையில் 4 மணி நேரம் தேங்கியிருந்த மழை நீரை சனிக்கிழமை வடியச் செய்ததோடு, இனி வெகுவாக தேங்காத வகையில் அடைப்புகள் சீா்செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com