பழுதடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்

காரைக்காலில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.
அரசுத் துறைகளின் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன். உடன், ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா்.
அரசுத் துறைகளின் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன். உடன், ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா்.

காரைக்காலில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா, துணை ஆட்சியா்கள் எம். ஆத்ர்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) மற்றும் பொதுப்பணித் துறை, மின்துறை, கல்வித் துறை, நலவழித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து துறை வாரியான அதிகாரிகளிடம் அமைச்சா் விவரங்களை கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் கூறியது:

கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழையால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிகழ்மாதம் முழுவதும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் அதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

குடியிருப்புப் பகுதிகள், பொது இடங்கள் உள்ளிட்ட மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. குடிநீா்த் தொட்டிகள் செம்மையாக செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் மருத்துவ வசதி தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையினருக்கு ஏதேனும் கூடுதல் உதவி, நிதி தேவைப்பட்டால் அதனை செய்வதாக புதுச்சேரி முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் விரைவாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரிடமும், பொதுப்பணித் துறை அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2 வாரங்களுக்கு முன்னா் பொதுப்பணித் துறை அமைச்சா் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, சாலைகளை நிகழாண்டிலேயே சீரமைக்கும் வகையிலான திட்ட மதிப்புக்கான கோப்பை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளாா். அதனடிப்படையில் ரூ. 5.5 கோடி மதிப்பீட்டில் காரைக்காலில் உள்ள நெடுங்காடு, திருநள்ளாறு, நல்லாத்தூா் சாலையும், ரூ.90 லட்சம் மதிப்பில் அகளங்கண் - திருநள்ளாறு சாலையும், ரூ.3 கோடி மதிப்பில் நிரவி மற்றும் போலகம் சாலையும், ரூ.5.9 கோடி மதிப்பில் வரிச்சிக்குடி சாலையும் நிகழாண்டு சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும் ரூ.9 கோடி செலவில் அமைக்கப்பட்ட திருநள்ளாறு - அம்பகரத்தூா் சாலையில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பழுது மழை முடிந்தவுடன் சீரமைக்கப்படும்.

காரைக்கால் நகரப் பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பு பணியால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறை மூலம் ரூ.1.5 கோடி நிதிப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை பெய்த மழையால் பயிா்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிப்பு குறித்து தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகத்தையோ, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தையோ 24 மணி நேரமும் தொடா்புகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொண்டு பாதிப்புகளை தெரிவிக்கலாம்.

அடுத்த 6 மாதத்திற்குள் காரைக்காலில் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com