காரைக்காலில் தலைக்கவசம் அணிய காவல் துறை அறிவுறுத்தல்: கண்டுகொள்ளாத பொதுமக்கள்

புதுவையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டுமென

புதுவையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டுமென காவல் துறை தலைமை ஆணை பிறப்பித்தது. இதை, அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினர் அறிவுறுத்தியதை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் அலட்சமாக செயல்பட்டனர். 
காவல் துறையின் இந்த ஆணையை அமல்படுத்தும் வகையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி நகர சாலையில் நின்று போக்குவரத்துப் போலீஸாரைப் போல, தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி தலைக்கவசம் அணிவது குறித்து எடுத்துக் கூறினார்.
போதிய அளவில் பல்வேறு நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், மக்களை கட்டாயப்படுத்தாமல் அவர்களாகவே தலைக்கவசம் அணியச் செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமியின் நிலைப்பாடாக இருக்கிறது. தலைக்கவசம் அணியும் சட்டத்தை அமல்படுத்துவதில் சமரசத்துக்கு இடமில்லை என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார். இந்த விவகாரம் புதுச்சேரியில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், துணை நிலை ஆளுநர் காவலர்கள் செய்யவேண்டியதை கையில் எடுத்துக்கொண்டு அவர்களைப்போல செயல்படுவது சரியான செயல் அல்ல என காரைக்காலுக்கு திங்கள்கிழமை வந்த புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி கருத்து கூறியிருந்தார்.
புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாக இதுகுறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டதோடு, அமலுக்கு வந்த நாளான திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸார்,  சாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி உரிய எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். காவல் துறை சார்பில், தலைக்கவசம் அணியாத முதல் முறை என்றால் ரூ.100 அபராதம், 2-ஆவது முறை என்றால் ரூ.300 அபராதம், 3-ஆவது முறை என்றால் ஓட்டுநர் உரிமம் தகுதி நீக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், காரைக்காலில், புதுச்சேரி பிராந்தியத்தைப்போன்று விழிப்புணர்வு மற்றும் சோதனையில் தீவிரம் காட்டப்படவில்லை. சட்டம் அமலுக்கு வந்த திங்கள்கிழமை காரைக்கால் போலீஸார் பெரும்பான்மையினர் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணியில் இருந்ததால் இதுகுறித்து கவனம் செலுத்தவில்லை. 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நகரப் பகுதியில் திருநள்ளாறு வீதி - பாரதியார் வீதி சந்திப்பு, பாரதியார் வீதி - புளியங்கொட்டை சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக் காவலர்கள் நின்றுகொண்டு, தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு வாகன ஓட்டிகளை அறிவுறுத்தினர். ஆனால் இதை வேடிக்கை செயல்பாடுகளைப்போல வாகன ஓட்டிகள் எடுத்துக்கொண்டதோடு, ஆயிரத்தில் ஓரிருவர் மட்டுமே தலைக்கசவம் அணிந்து செல்கின்றனர். பெரும்பான்மையினர் வழக்கம்போல தலைக்கவசமின்றி வாகனத்தை இயக்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் இந்த விவகாரத்தில் முற்றிலும் சட்டத்தை கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் சிலர் கூறியது: காரைக்கால் மாவட்டம், முழுவதும் ஒவ்வொரு பகுதியும் குறுகிய கிலோ மீட்டர் கொண்டதாகும். இந்த தூரத்துக்கு தலைக்கவசம் அணிந்து செல்வது பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தும். தொலைதூரத்துக்கு மட்டுமே இது சாத்தியம். மேலும் காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலை தவிர்த்து, பிற பகுதி சாலைகள் மிக மோசமாக பள்ளம் படுகுழிகளாக இருக்கிறது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் ஏராளம். செல்லிடப்பேசியை பயன்படுத்திக்கொண்டும், 2 பேருக்கு மிகுதியான நபர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டுவோரும் ஏராளம். 
இவைகளை ஓரளவு சீர்படுத்த நடவடிக்கை எடுத்தால் விபத்து கட்டுக்குள் வரும். பின்னர் தலைக்கவச சட்டத்தை அமல்படுத்துவதை படிப்படியாக மேற்கொள்ளலாம். திடீரென சட்டத்தை அமல்படுத்தி நடவடிக்கை தீவிரப்படுத்துவது சரியான செயல் அல்ல என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com