விவசாயிகள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

விவசாயிகள் பாதுகாப்புக்கான சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அவசியம் என ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்தார். 

விவசாயிகள் பாதுகாப்புக்கான சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அவசியம் என ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்தார். 
அகில இந்திய வானொலி காரைக்கால் பண்பலை மூலம் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவர் தின விழா வியாழக்கிழமை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 130 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தலைமை வகித்து பேசியது :
உழவர் தின நிகழ்ச்சியில் பல்வேறு பகுதி விவசாயிகளும் ஒருங்கிணைந்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு எளிதில் கிடைக்காத ஒன்றாகும். இது காரைக்காலில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா இயற்கை வளம் மிகுந்த நாடு. மனித நாகரிகம் தோன்றியது முதல், முதல் விஞ்ஞானியாக உருவெடுத்தது  விவசாயிகள்தான். பரவலாக நிலத்தில் பரவிக்கிடக்கும் பல வகை தாவரங்களை வகைப்படுத்தி, இவை இன்னென்ன வகை, இதற்கு இந்த குணம் உண்டு, இவற்றின் ஆயுள்காலம் குறித்த பல்வேறு தகவல்களை ஆராய்ந்து கண்டறிந்தது விவசாயிகளே.
விவசாயிகள் விதைப்பு செய்தது முதல் அறுவடை செய்து விற்பனை செய்வது முதல் ஒவ்வொரு மணி நேரமும் பிரச்னையை சந்திப்பது, சமாளிப்பதிலேயே நேரம் போய்விடுகிறது. நமக்கான உரிமைகளை நிலைநாட்டி வெற்றிபெறத் தெரியவில்லை. இந்தியாவிலும், உலக அளவிலும் விவசாயிகள் பாதுகாப்புக்கென பல்வேறு சட்டங்கள் உள்ளன. விதை சட்டம் முதல் உற்பத்தி, உற்பத்திக்குச் சான்று பெறுதல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றுக்கு என பல சட்டங்கள் உள்ளன. இதை தனியொரு விவசாயி தெரிந்திருக்க முடியாவிட்டாலும், விவசாய அமைப்புகள் தெரிந்துகொண்டு விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்.
இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டினாலும், அதை முறையாக சந்தைப்படுத்தி லாபம் ஈட்டிக்கொள்ளத் தெரியவில்லை. நமது நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, அதை உருமாற்றி, பதப்படுத்தி வேறு பெயரில் நம் நாட்டுக்கே விற்பனைக்கு அனுப்புகிறது அயல்நாடுகள். ஆனால், நம்மிடையே அதற்கான அறிவாற்றல் குறைவாக இருக்கிறது. இதுபோன்றில்லாமல், கால மாற்றத்துக்கேற்ப நாம் திறனை மேம்படுத்திக் கொண்டு, நமது உற்பத்தியின் மூலம் பெரும் பொருளீட்ட  முன்வர வேண்டும். அதற்கான ஆற்றலை ஒவ்வொரு விவசாயியும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
புதுச்சேரியில் இருந்தவாறு செல்லிடப்பேசி வாயிலாக வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், இந்திய பாரம்பரிய அரிசி வகைகளை விவசாயிகள் பலர் தொகுத்து மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜாவிடம் வழங்கினர். வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சி. ரத்தினசபாபதி, வேளாண் கல்லூரி பேராசிரியர் அழ. நாராயணன், சீர்காழி இந்திய பாரம்பரிய அறிவியல் மைய திட்ட இயக்குநர் சுபாஷினி ஸ்ரீதர், சேந்தமங்கலம் ஏ. சபீர் அகம்மது, ஆண்டிமடம் பி. பிரபு, பவித்ரமாணிக்கத்தைச் சேர்ந்த எஸ். ரவிசங்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் வெ. அம்பேத்கர் வாழ்த்தி பேசினார். காரைக்கால் வானொலி நிலையத் தலைவர் ஜி. சுவாமிநாதன் வரவேற்றார். நிகழ்ச்சி பொறுப்பாளர் ஆர். வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com