வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த வாயிற்கூட்டம்
By DIN | Published On : 05th January 2019 07:52 AM | Last Updated : 05th January 2019 07:52 AM | அ+அ அ- |

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான ஆயத்த வாயிற்கூட்டம் காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், உள்ளாட்சி மற்றும் சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு ஊழியர்களிடம் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் ஜன. 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம், தொடர்பான ஆயத்த வாயிற்கூட்டம் காரைக்காலில் உள்ள பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பி.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், கெளரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின கூட்டமைப்பினர், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வாயிற்கூட்டத்தில் பங்கேற்றனர்.