உமாபசுபதீசுவரர் கோயில் கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா

காரைக்கால் அருகேயுள்ள ஸ்ரீ உமாபசுபதீசுவரர் கோயிலில் மாட்டுப் பொங்கல் வழிபாடாக கோசாலையில்

காரைக்கால் அருகேயுள்ள ஸ்ரீ உமாபசுபதீசுவரர் கோயிலில் மாட்டுப் பொங்கல் வழிபாடாக கோசாலையில் உள்ள மாடுகளுக்கு புதன்கிழமை பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
அம்பகரத்தூர் அருகேயுள்ள ஸ்ரீ உமாபசுபதீசுவரர் கோயில் கோசாலையில் மாட்டுப் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு,  ஸ்ரீவிக்னேஸ்வரபூஜை, புண்யாகவாஜனம் செய்யப்பட்டு மஞ்சள், மா, திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், பால், சந்தனம் உள்ளிட்டவையுடன் கலசாபிஷேகம் செய்யப்பட்டு, நான்கு வீதி வழியாக சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கோசாலை சென்றடைந்தனர். பின்னர், கோசாலையில் உள்ள மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை, பழங்கள் கொடுத்து நமஸ்காரம் செய்து வழிபாடு செய்தனர். சிவாச்சாரியார்கள் சிறப்பு ஆராதனை நடத்தினர்.
முன்னதாக, கோசாலையில் உள்ள மாடுகளை நீராடச் செய்து, புதிதாக கயிறு கட்டப்பட்டு, மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. பசுக்களுக்கு ஆராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
கோசாலையில் இந்த வழிபாட்டை அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்கம் நடத்தியது.
இந்த பூஜையை தலைமையேற்று நடத்திய சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் சிவாச்சாரியாருமான டி. ராஜாசுவாமிநாத குருக்கள் கூறியது: கோமாதாவுக்கு செய்யப்படும் பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு செய்யும்போது, ஏழு கோடி தேவதைகளையும் மகிழ்வித்ததாக அமைவதோடு அவர்களது அனுக்கிரகமும் கிடைக்கும். திருஷ்டி, திதி, சம்ஹாரம், திருகாலபம், அனுக்கிரகம், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் ஆகியவற்றை செய்யும் அஷ்ட லட்சுமிகளின் அருளும், பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆதிபராசக்தி அனுகிரங்களும் கிடைக்கும். பசுவுக்கு பூஜை செய்வதால் பக்தர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். இதனாலேயே மாடுகளுக்கு மாட்டுப் பொங்கல் நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவதாகவும், பக்தர்கள் முழு நம்பிக்கையுடன் பூஜையில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று மேல ஓடுதுறை பகுதியில் உள்ள  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பசுக்களை வைத்து பூஜை செய்யப்பட்டது. திருமலைராயன்பட்டினம் கொம்யூன், வாஞ்சூரில் காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத  ஸ்ரீ விஸ்வநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகத்தால் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 75-க்கும் மேற்பட்ட  நாட்டு பசுக்கள் உள்ளன. கோயில் டிரஸ்டி ஆடிட்டர் பி.கணபதி சுப்ரமணியன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பசுக்களுக்கு பூஜை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com