பாஜகவை புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும்: அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத்

புதுச்சேரியை புறக்கணிக்கும் பிரதமர் மோடியையும், பாஜகவையும் புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும்,


புதுச்சேரியை புறக்கணிக்கும் பிரதமர் மோடியையும், பாஜகவையும் புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுச்சேரி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் கூறினார்.
காரைக்காலில்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் சக்தி செல்லிடப்பேசி செயலி திட்ட தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சக்தி திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான விளக்க கையேடுகளை வெளியிட்டு சஞ்சய் தத் பேசியது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது முதல் கட்சியில் பல்வேறு ஆக்கப்பூர்வமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இத்திட்டத்தில் இணைவதன் மூலம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ராகுல் காந்தியுடன் தொடர்பில் இருக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் இந்த செயலி மூலம் தொண்டர்களின் கருத்தை அறிந்து அதனடிப்படையிலேயே கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்மூலம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இதில் அதிகளவில் உறுப்பினர்களை இணைக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை பிரதமர் மோடி வந்து பார்வையிடவில்லை. அவர் புதுச்சேரி மக்களை புறக்கணிப்பதோடு, துணை நிலை ஆளுநர் அலுவலகம் மூலம் மாநில காங்கிரஸ் அரசின் மக்கள் நலத் திட்டங்களையும் தடுத்து வருகிறார். எனவே, வரும் மக்களவை தேர்தலில் பாஜகவையும், பிரதமர் மோடியையும் புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பச் செல்லவைக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான ஆர். கமலக்கண்ணன் தலைமை வகித்துப் பேசியது : கடந்த மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியால் மிகப்பெரிய ஊழல், தவறுகள் நடந்துவிட்டதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி இளைஞர்களையும், ஊடகங்களையும் நம்ப வைத்து நரேந்திர மோடி வெற்றி பெற்று பிரதமரானார். ஆனால், தற்போது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள், மகளிர் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.
நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. தற்போது ராகுல் காந்தி தலைமையில் நாட்டை சர்வாதிகார சக்திகளிடமிருந்து காப்பாற்றும் வகையில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகி வருகிறது. புதுச்சேரியில் 1993 -ஆம் ஆண்டு வி. வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, சுமார் 20 ஆண்டுகளாக இலவச அரிசி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலமே நாட்டில் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஊதியமும், அரிசியும் தரப்பட்டது. ஆனால், தற்போது துணை நிலை ஆளுநர் இத்திட்டத்தை முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதனால் அரிசி வழங்க முடியாமல் அதற்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துகிறது. துணை நிலை ஆளுநர் எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். எனினும் மத்திய, மாநில நிதியாதாரங்களின் மூலம் நாராயணசாமி அரசு கடுமையாக மக்களுக்காக பாடுபடுகிறது என்றார்.
புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், காரைக்கால் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாநில சக்தி செயலி திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.கே. தேவதாஸ், எம்.ஓ.எச்.யு. பஷீர், மோகனவேல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிங்காரவேலு, மாவட்ட துணைத் தலைவர் நாகரத்தினம், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சின்னத்தம்பி என்கிற அப்துல்காதர், ஆர்.கே. செல்வமணி, ஆர்.பி. சந்திரமோகன்,  மாறன், அசோகானந்தன், வட்டார செயல் தலைவர் சேதுராமன் மற்றும் மாவட்ட சிறுபான்மைத் துறை தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர், மீனவரணி தலைவர் ஏ.எம்.கே. அரசன்  உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணி தலைவர்கள் உள்ளிட்ட கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com