டிஜிட்டல் இந்தியா 5-ஆம் ஆண்டு தொடக்கம்: அஞ்சல் நிலையத்தில் சிறப்பு மேளா

டிஜிட்டல் இந்தியா 5-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்கால் தலைமை அஞ்சல் நிலையத்தில் சிறப்பு மேளா திங்கள்கிழமை நடைபெற்றது.

டிஜிட்டல் இந்தியா 5-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்கால் தலைமை அஞ்சல் நிலையத்தில் சிறப்பு மேளா திங்கள்கிழமை நடைபெற்றது.
டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவுபெற்று ஜூலை 1-ஆம் தேதி 5-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி காரைக்கால் அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு மேளா நடைபெற்றது. அஞ்சல் நிலைய வாயிலில் அஞ்சலக வங்கிக் கணக்கு தொடக்கம் உள்ளிட்ட சிறப்பு சேவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சிறப்பு மேளாவை நாகப்பட்டினம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் எஸ். பஞ்சாபகேசன் தொடங்கி வைத்தார். மேளாவின்போது அஞ்சல் வங்கிக் கணக்கு தொடங்கியோருக்கு கியூஆர் அட்டையை அவர் வழங்கினார். மேலும், காப்பீடு முதிர்ச்சியடைந்த பயனாளிகளுக்கு தொகைக்கான காசோலையையும் அவர் வழங்கினார். காரைக்கால் அஞ்சல் நிலைய வளாகத்தில் இயங்கிவரும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தையும் அவர் பார்வையிட்டார். 
அஞ்சல் அதிகாரிகள் சிறப்பு மேளா குறித்தும், டிஜிட்டல் இந்தியா திட்ட சேவைகள் குறித்தும் கூறியது : காரைக்கால் அஞ்சல் சேமிப்பு வங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது முதல் இதுவரை 2,742 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 27 மையங்கள் மூலமாகவும், தபால்காரர்கள் மூலமாகவும் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. காரைக்கால் அஞ்சல் பாஸ்போர்ட் சேவா கேந்திரா கடந்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கியது முதல் இதுவரை 15,632 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருவாரூர், நாகூர், சங்கரன்பந்தல், பொறையாறு, எரவாஞ்சேரி, நன்னிலம், பேரளம், தரங்கம்பாடி, திட்டச்சேரி, நரசிங்கம்பேட்டையை சேர்ந்தோர் இந்த மையம் மூலம் பயனடைகின்றனர்.
அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையமும் செயல்படுகிறது. புதிதாக ஆதார் அட்டைக்கு பதிவு செய்தல், ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் ஆதார் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
தபால் நிலையத்தின் சேவைகளை மக்கள் அறிந்துகொண்டு, சேவைகளின் மூலம் பயனடையலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தபால் நிலையங்களிலோ அல்லது தபால் ஊழியரிடமோ தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் உமாபதி, கோட்ட ஆய்வாளர் எம்.பி. செந்தில், காரைக்கால் அஞ்சலகத் தலைவர் வி. நாகராஜன், அஞ்சலக வங்கி கிளை மேலாளர் கே. ஸ்ரீநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com