உச்சநீதிமன்றத் தீர்ப்பு  எதிரொலி: புதுவையில் இலவச அரிசி பிரச்னை முடிவுக்கு வருமென மக்கள் நம்பிக்கை

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியான நிலையில், புதுவையில் இலவச அரிசி வழங்கல் தொடர்பான பிரச்னைக்கு முடிவுக்கு வருமெனவும், மக்களுக்கு இனி தாமதமின்றி இலவச அரிசி வழங்கலை அரசு முறைப்படுத்த வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறையால் வழங்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் அரசு வழங்க முன்வந்தது. மஞ்சள் நிற அட்டைதாரர்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்பதால், ஏழைகளுக்கு மட்டும் அரிசி வழங்கவேண்டும் என்பது துணை நிலை ஆளுநரின் கருத்து. இது அரசின் கொள்கை முடிவு என்ற விவாதம் நீடித்த நிலையில், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக அரிசிக்கான பணம் வங்கிக் கணக்கில் செலுத்த அனுமதி தரப்பட்டது.
ஆனால் அரிசியும் முறையாக வழங்கப்படவில்லை, அரிசிக்கான பணமும் முறையாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்.
இந்நிலையில், கடந்த மாதம் ஜனவரி மாதத்துக்கான அரிசி சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்துக்கான அரிசி காரைக்காலுக்கு இம்மாத முற்பகுதியில்  கொண்டுவரப்பட்டு விநியோகம் தொடங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் 30 ஆயிரம் சிவப்பு அட்டைதாரர்கள் உள்ளனர். ஓர் அட்டைக்கு  20 கிலோ வீதம், ஒரு மாதத்திற்கு 588 டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால்  நிகழ் மாதத்தில் முதல்கட்டமாக 119 டன் அரிசி வந்துசேர்ந்தது. தற்போது மேலும் 100 டன் அரிசி வரவழைக்கப்பட்டு விநியோகம் நடைபெற்றுவருகிறது. 
புதுச்சேரி மாநிலத்துக்கு அரிசி வழங்கலை 2 நிறுவனங்கள் செய்வதாகவும், படிப்படியாகவே அரிசி காரைக்காலுக்கு அனுப்பிவைக்கப்படுவதால், ஒட்டுமொத்த மாவட்டத்தின் பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவிக்கிறது.
காரைக்காலில் 5 பேரவைத் தொகுதிகளில் ஒருசில பேரவைத் தொகுதிகளில் முன்னுரிமை அடிப்படையிலும், பிற தொகுதிகளில் அரிசி வந்த பிறகும் தரும் வகையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி,  சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க துணை நிலை ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்தும், இதற்கு உச்சநீதிமன்றம் தடை கொடுக்கவில்லை எனவும் கூறினார். மேலும், இலவச அரிசி வழங்கலில் அரசுக்கான அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்திடம் கருத்துகளை தாம் தெரிவித்திருப்பதாகவும், ஜூலை 13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பாக தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யது. இது ஆட்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆளும் கட்சியை சேர்ந்த காரைக்கால் நிர்வாகி ஒருவர் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளாக நாராயணசாமி அரசு, துணை நிலை ஆளுநரின் தேவையற்ற முட்டுக்கட்டைகள், மத்திய அரசின் பாராமுகத்தால் கடுமையாக பாதித்தது. எனினும் திறம்பட அரசு நிர்வாகத்தை செய்யும் நாராயணசாமியின் போராட்ட குணத்தை மக்கள் புரிந்துகொண்டனர். இதற்கு பரிசாகவே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர்.
சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கலாம், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடாது என்பது துணை நிலை ஆளுநரின் எண்ணம். அரசின் தீவிர முயற்சியால், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு அரிசிக்கான பணத்தை தர துணை நிலை ஆளுநர் தமக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தினார். தற்போது உச்சநீதிமன்றத்தில் அரிசி வழங்கல் தொடர்பான கருத்தும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், துணை நிலை ஆளுநரின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என கூறிவிட்ட பிறகு, புதுவையில் பிரதான பிரச்னையாக உள்ள அரிசி வழங்கல் பிரச்னை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.
பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, சிவப்பு நிற அட்டை, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கலில் இனி பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. புதுச்சேரி அரசு, இந்த திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை வழங்கி, இந்த திட்டத்தை முறையாக நிறைவேற்றினால், அரிசி விவகாரத்தில் அரசின் மீது படிந்த அவப்பெயர் மாறத் தொடங்கும் என நம்பிக்கைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com