எம்.எல்.ஏ. அன்பழகனை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணை நிலை ஆளுநருக்கு போராட்டக்குழு வலியுறுத்தல்

பிராந்திய இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதமாக தொடர்ந்து

பிராந்திய இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வரும் புதுச்சேரி சட்டப் பேரவை அதிமுக  குழுத் தலைவர் ஏ.அன்பழகனை தகுதி நீக்கம் செய்ய துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 இது குறித்து காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளரும், மூத்த வழக்குரைஞருமான எஸ்.பி.செல்வசண்முகம் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது : 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு தொடர்பாக புதுச்சேரி எம்.எல்.ஏ. அன்பழகன்  அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதத்திலும் தொடர்ந்து பேசி வருகிறார். பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், இந்தியாவில் வேறு எங்கும் இல்லை, இது அரசியலமைப்புக்கு முரணானது எனக் குறிப்பிடுகிறார்.
  காரைக்கால் பிராந்தியம் பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்பட்டு பின் தங்கிய நிலையில் உள்ளதால் கல்வி, வேலைவாய்ப்புகளில் காரைக்கால் பிராந்தியத்துக்கு 23 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் காரைக்கால் போராட்டக்குழு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. 
அதனடிப்படையில்தான்  2006-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் போராட்டம் நடத்திய அதே நாளில் புதுச்சேரி அரசு உயர் கல்வியில் காரைக்காலுக்கு 18 சதவீதம், மாஹே பிராந்தியத்துக்கு 4, ஏனாம் பிராந்தியத்துக்கு 3 சதவீதம், 75 சதவீதம் பொதுப்படையானது என பிராந்திய இட ஒதுக்கீட்டு முறையை அறிவித்தது. பின்னர் 2010 -ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு, 75 சதவீத பொதுப்பிரிவு இட ஒதுக்கீட்டை புதுச்சேரி பிராந்தியத்துக்கான இட ஒதுக்கீட்டாக மாற்றி அறிவித்தது.
 இதனிடையே பிராந்திய இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. 
இது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்டப்படி பின் தங்கிய பகுதிகளுக்கு இட ஒதுக்கீடு தேவை என்றால் அளிக்கலாம். இதே போல மத்தியப் பிரதேசம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிராந்திய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது சரிதான் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 
 பின்னர் காரைக்காலுக்கான ஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு 13 சதவீதமாக குறைத்தது. ஆகவே பிராந்திய இட ஒதுக்கீடு என்பது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி எம்.எல்.ஏ அன்பழகன் ஒவ்வோர் ஆண்டும் கல்வியாண்டு தொடக்கத்தின்போது பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் வகையிலும், காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசி வருகிறார். 
அரசியலமைப்புச் சட்டப்படி உறுதி எடுத்துக்கொண்ட ஒரு எம்.எல்.ஏ இவ்வாறு பேசுவது அந்த  சட்டத்துக்கு முரணானது. எனவே இது குறித்து துணை நிலை ஆளுநர் கவனத்தில் கொண்டு அவரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
  இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமெனில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற அரசியல் கட்சியினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். 
மாநில அந்தஸ்து குறித்து அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளன. 
அதற்கு அன்பழகன் போன்றவர்கள் முயற்சி எடுக்கட்டும். புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற்றுவிட்டால் காரைக்கால் தனி யூனியன் பிரதேசமாகிவிடும். 
அப்போது பிராந்திய இட ஒதுக்கீட்டு முறைக்கும் அவசியமிருக்காது. அன்பழகன் போன்றோர் ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்தின்போதும் இடஒதுக்கீடு தொடர்பாக போர்க்கொடி தூக்க வேண்டிய அவசியமும் இருக்காது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com