கலைகிறதா மயிலாடுதுறையின் தனி மாவட்டக் கனவு?: கவலையில் மக்கள்

 மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த சில நாள்களாக சமூக


 மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் பரவும்  தகவல்கள் மயிலாடுதுறை மக்களிடையே அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. 
நாகை மாவட்டத்தின் மிகப் பெரிய வருவாய் கோட்டம் மயிலாடுதுறை. மாவட்டத்தில், அதிக மக்கள் தொகையும், அதிக வருவாயும் கொண்ட இந்த வருவாய் கோட்டம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகளையும், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 வட்டங்களையும், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது.
1991 -ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலிருந்து, நாகையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே மயிலாடுதுறையை  தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க  வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
நாகை வருவாய் கோட்ட பகுதிகள் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்துக்குள்பட்டவை. மயிலாடுதுறை வருவாய் கோட்ட பகுதிகள் காவிரி வடிநிலக் கோட்டத்துக்குள்பட்டவை.  பாசனத்தால் மட்டுமல்லாமல், பழக்க வழக்கங்களாலும் இந்த 2 வருவாய் கோட்டங்களும் மாறுபட்டே உள்ளன.
சீதோஷ்ண நிலை, வேளாண்மை, தொழில் என பல்வேறு நிலைகளிலும் மாறுபட்ட இந்த 2 வருவாய் கோட்டங்களையும் ஒரே மாவட்டமாக நிர்வகிப்பதில் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல்வேறு நடைமுறைப் பிரச்னைகள் உண்டு. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றக் காலங்களில் அந்தப் பிரச்னைகள் பெரியளவில் வெளிப்படும்.  இதனால், அதிகம் பாதிக்கப்படுவது மயிலாடுதுறையாக தான் இருக்கும். 
இவை தவிர, இதற்கு,  மயிலாடுதுறை - நாகை இடையேயான தொலைவும், பூகோள அமைப்பும் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கும் கோரிக்கைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மாவட்டத்தின் தலைநகரான நாகைக்கு செல்ல வேண்டுமெனில்,  யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும் அல்லது அடுத்த மாவட்டமான திருவாரூர் மாவட்டம் வழியாக தான் நாகைக்கு செல்ல முடியும்.
காரைக்கால் மாவட்டத்தைக் கடந்து செல்லும் வாகனங்கள் புதுச்சேரி அரசுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டிய கட்டாயமும் உண்டு. சொந்த மாவட்டத்தின் தலைநகருக்குச் செல்லும் எந்த மாவட்ட மக்களும் சந்திக்காததுஇந்தப் பிரச்னை.
மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட கொள்ளிடம் பகுதியிலிருந்து ஒரு அரசுத் துறை அலுவலர் பணி நிமித்தமாக, மாவட்டத் தலைநகரான நாகைக்கு சென்று வர வேண்டுமெனில், ஏறத்தாழ ஒரு பணி நாள் முழுமையாகத் தேவைப்படுகிறது என்பதால், மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பணியாற்றும் அரசுத் துறை அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்னைகளும் ஏராளம். 
மேலும்,  அதிமுக, திமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,  மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்காததற்கும்,  மயிலாடுதுறையின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் பல ஆண்டுகளாக முடங்கி கிடப்பதற்கும் மயிலாடுதுறைக்கு  மாவட்டத் தலைநகர் அந்தஸ்து கிடைக்காததே  காரணம்எனப்படுகிறது. 
4 வட்டங்களையும், 286 வருவாய்க் கிராமங்களையும், 2 நகராட்சிகளையும், மாவட்டத்துக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட மயிலாடுதுறை வருவாய்க் கோட்டப் பகுதிகளை உள்ளடக்கி, மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்காத அரசியல் கட்சிகளே இல்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர், எந்தக் கட்சியும் இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் கொள்வதும் இல்லை என்பது இங்கு வாடிக்கையான வேடிக்கை. 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது,  மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா? அல்லது கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்த தங்கள் கோரிக்கை, கோரிக்கையாகவே தொடருமா? என்ற அச்சமும், எதிர்பார்ப்பும் மயிலாடுதுறை மக்களைஆட்கொண்டது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக மயிலாடுதுறைக்கு வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இதுகுறித்து வாக்குறுதி அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய மாவட்டக் கோரிக்கை குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, அவரது உரையின் இடையே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கக் கோரி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் குரல் எழுப்பினர். அப்போதும், அது குறித்து முதல்வர் கவனம் கொள்ளாமலேயே
தவிர்த்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கட்செவி அஞ்சலில் வைரலாக பரவி வரும், மாவட்டங்கள் மறுசீரமைப்பு மற்றும் புதிய மாவட்டம் உருவாக்கம் குறித்த ஓர் பதிவு, மயிலாடுதுறை மக்களிடையே கடும் அதிருப்தியையும், விரக்தியையும் ஏற்படுத்தி வருகிறது.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்கப்படுவதாகவும், அதில் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட குத்தாலம் வட்டம் இணைக்கப்படுகிறது எனவும், மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் கொள்ளிடம் புதிய வட்டமாக உருவாக்கப்பட்டு, மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களும், நாகை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறை மக்கள் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தப் பதிவு மயிலாடுதுறை மக்களிடையே கடந்த சில நாள்களாக கடும் விரக்தியை
ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஓரிரு நாள்களாக மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், வழக்குரைஞர்கள் சங்கம் உள்பட சில அமைப்புகள் தனி மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரக வட்டாரங்களிலும், ஆளும் கட்சி வட்டாரங்களிலும் கேட்டபோது, மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்கள் திருவாரூர் மாவட்டத்தில் இணைக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை எனக் கூறப்படுகிறது.  இருப்பினும், சட்டப்பேரவை நடைபெற்று வரும் காலத்தில், எதையும் உறுதிபடத் தெரிவிக்க முடியாத நிலை இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். 
இதனிடையே, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படவுள்ளது எனவும்,  தனி மாவட்டக் கோரிக்கையை மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவையில் வலியுறுத்த வேண்டும் எனவும் சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மாறுபட்ட இந்தக் கருத்துகள் மக்களிடையே பெரும் விரக்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டக் களமாகி வரும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பும்  உள்நோக்கத்துடன்  மாவட்டச் சீரமைப்புக் குறித்த பதிவுகள் பரப்பப்பட வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள்
தெரிவிக்கின்றன. 
மாவட்டச் சீரமைப்பு உண்மையா அல்லது மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியா? என்பதற்கு அப்பாற்பட்டு, தங்களின் கால் நூற்றாண்டு கனவு நிறைவேறுமா? அல்லது கானல் நீராகுமா? என்ற அச்சத்துடன் கூடிய எதிர்பார்ப்பே மயிலாடுதுறை மக்களை ஆக்கிரமித்துள்ளது.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா? என்பது குறித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி, தமிழக அரசின் மெளனத்தைக் கலைக்க வேண்டும், மக்களின் குழப்பத்தைப் போக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com