மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது காரைக்கால் மாங்கனித் திருவிழா

காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் சனிக்கிழமை  தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14)  அம்மையார் கோயிலில் பரமதத்தர் - புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்)


காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் சனிக்கிழமை  தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14)  அம்மையார் கோயிலில் பரமதத்தர் - புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 
காரைக்காலில் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு  தனிக் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை விளக்கி 5 நாள்கள் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
அம்மையாருக்கு நடக்கும் திருமணம், அம்மையாரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அவரது வீட்டுக்கு அமுதுண்ண செல்வது, கணவர் தமக்காக அனுப்பிவைத்த மாங்கனியை இல்லத்துக்கு வந்த சிவனடியாருக்கு அளித்து, கணவர் வந்து சாப்பிடும்போது இறைவனிடம் வேண்டி மாங்கனி பெற்றது, தமது மனைவி இறைவனுக்கு ஒப்பானவர் எனக் கருதி கணவர்  (பரமதத்தர்) பிரிந்து செல்வது, பரமத்தர் மறுமணம் செய்துகொள்வது, கைலாயத்தை அம்மையார் தலைக்கீழாக சென்றடைவது, அம்மையாருக்கு இறைவனும்  இறைவியும் காட்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஆன்மிக நிகழ்வாக 13 முதல் 17-ஆம் தேதி வரை  நடத்தப்படுகிறது.
புகழ்பெற்ற நிகழ்ச்சியாக, பிச்சாண்டவர் வீதியுலாவின்போது மாங்கனி இறைப்பு நிகழ்வு 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இவ்வாறான மாங்கனித் திருவிழா  தொடக்கமாக, ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் சனிக்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை நடைபெற்றது.  திருக்கல்யாண வைபவத்துக்காக பரமதத்தர், ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக இரவு அம்மையார்  மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு  ஸ்ரீ புனிதவதியார் தீர்த்தக் கரைக்கு (அம்மையார் குளம்)  எழுந்தருளும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பின்னர், பகல் 10.30 மணியளவில் புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாண நிகழ்ச்சி  அம்மையார் கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது. புதுமணத் தம்பதிகள், சுமங்கலிப் பெண்கள், முக்கியஸ்தர்கள்  உள்ளிட்ட திரளான பக்தர்கள் இந்த  வைபவத்தில் கலந்துகொள்வர்.   மாலை கைலாசநாதர் கோயிலில்  ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளைச்சாற்றுடன் சிவதாண்டவம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு பரமதத்தர் - புனிதவதியார் முத்து சிவிகையில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாங்கனித் திருவிழா தொடங்கியதையொட்டி காரைக்கால் நகரம் விழாக்கோலம்பூண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com