காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உத்ஸவம்: புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையார்

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உத்ஸவத்தில், புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி,  அமைச்சர் உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் புனிதவதியார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அவர்,  அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாக உருவானவர். தேவாரத்துக்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவர். இவ்வாறெல்லாம் பெருமைக்குரிய காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை விளக்கும் வகையில், காரைக்காலில் கைலாசநாதர் தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
  இந்த திருவிழா சனிக்கிழமை இரவு காரைக்கால் ஆற்றங்கரை சித்திவிநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்புடன் தொடங்கியது. சிறப்பு மேள வாத்தியங்கள், குதிரை வாகனங்கள் பூட்டிய மின் அலங்கார இந்திர விமானத்தில் பரமதத்தர் புறப்பாடு நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அம்மையாரின் திருக்கல்யாண உத்ஸவம் அம்மையார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக திருக்குளக்கரைக்கு புனிதவதியார் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பட்ட பரமதத்தர், அம்மையார் கோயிலுக்கு எழுந்தருளினார். திருக்கல்யாண மேடையில் நடைபெற்ற வைபவத்தில் காரைக்கால் அம்மையார் - பரமத்தரை அருகருகே வீற்றிருக்கச் செய்து திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. திருக்கல்யாண நிகழ்ச்சியில், சிறப்பு ஹோமம் நடத்தி, திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து பரமதத்தர் சார்பில் சிவாச்சாரியார்- அம்மையாருக்கு திருமாங்கல்யதாரணம் செய்விக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அட்சதையை தூவி அம்மையாரை வழிபட்டனர். அம்மையார் திருக்கல்யாணத்தை தரிசிப்பது திருமணமாகாதோர், சுமங்கலிப் பெண்களுக்கு மிகுந்த விசேஷமென கருதப்படுவதால், மண்டபம் உள்ளேயும், வெளியேயும் திரளானோர் கலந்துகொண்டனர். திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகள் இருக்கை மாறி அமரவைக்கப்பட்டது. தொடர்ந்து, 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி,  வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்,  சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.என்.திருமுருகன், கே.ஏ.யு.அசனா, மாவட்ட  ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஜெ.சுந்தர், முன்னாள் அமைச்சர் ஏ.வி.சுப்பிரமணியன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை மண்டபத்தின் உள்ளே இருந்தவர்கள் நேரடியாக கண்டனர். வெளியிலும் ஏராளமான பக்தர்கள் இருந்தபடியால், திருக்கல்யாணத்தை பெரிய எல்இடி திரை மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
முன்னதாக அம்மையார் திருக்கல்யாணத்துக்கு வந்த அனைவரையும் போலீஸார் தீவிர சோதனைக்குப் பின்னரே மண்டபத்துக்குள் அனுமதித்தனர். காவலர்கள், சீருடையில்லா காவலர்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு  மாங்கனியுடன் கூடிய தாம்பூலப் பைகள் வழங்கப்பட்டன.  தாம்பூலப் பைகளை சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் உபயமாக முன்னின்று வழங்கினார். முக்கிய பிரமுகர்கள் மட்டும் மண்டபத்துக்கு வந்த வாயில் வழியே திரும்பினர். பக்தர்கள் அனைவரும் அம்மையார் குளக்கரை, சோமநாதர் கோயில் பின்புற வாசல் உள்ளிட்ட பகுதிகள் வழியே வெளியேறினர். இதனால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், செயலர் எம்.பக்கிரிசாமி, துணைத் தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் கே.பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com