காரைக்கால் துறைமுக நிதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி

துறைமுக நிதியுதவியில் திருப்பட்டினத்தில் 2,500 ஏக்கர் பாசன வசதி பெறும் நீர்நிலை தூர்வாரும் பணி மானாம்பேட்டை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

துறைமுக நிதியுதவியில் திருப்பட்டினத்தில் 2,500 ஏக்கர் பாசன வசதி பெறும் நீர்நிலை தூர்வாரும் பணி மானாம்பேட்டை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தனர். திட்டப்பணி குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: மானாம்பேட்டை சானல் வாய்க்கால் தூர்வாரும் பணி தற்போது தொடங்கியுள்ளது. துறைமுகத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் நிதியுதவியில் இந்த பணி நடைபெறுகிறது. இந்த வாய்க்கால் 10 கி.மீ. தூரம் தூர்வாரப்படும்போது, நிரவி, திருப்பட்டினம் பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் பாசன வசதி பெறும். 
இப்பணியை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க கேட்டுக்கொண்டுள்ளோம். மேலும் காரைக்காலில் பிரதான நீர்நிலைகளை தூர்வாருவதற்கு தேவையான நிதி அளிக்குமாறு துறைமுகத்தை மாவட்ட நிர்வாகம் அணுகியுள்ளது. துறைமுகத்தின் தலைமையின் அனுமதி பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுமென நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுத் துறைகள் மூலமாகவும், கோயில் நிர்வாகத்தினர் மூலமாகவும் அந்தந்த பகுதி குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணியாக தூர்வாருதல் இருக்கிறது. இந்த பணிகளை விரைவாக நிறைவேற்றிட திட்டமிட்டு செய்கிறோம்.
காவிரி நீர் வரும்போதும், பருவமழை பெய்யும்போதும் கிடைக்கும் தண்ணீரை தேவையான அளவு சேமித்து வைக்கும் நோக்கில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தரவேண்டும். இந்த பணிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்புத் தருகிறார்கள் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர் எம். ஆதர்ஷ், காரைக்கால் துறைமுக உதவி துணைத் தலைவர் ராஜேஷ்வர்ரெட்டி, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் வீரசெல்வம், திருப்பட்டினம், ஓடுதுறை, விழிதியூர் பகுதி பாசனதாரர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com