காரைக்கால் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் மலேசிய மணல்: விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா ?

காரைக்கால் துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விநியோகமின்றி 2 மாதங்களாக

காரைக்கால் துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விநியோகமின்றி 2 மாதங்களாக தேங்கிக் கிடக்கிறது. இந்த மணலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.  
காரைக்கால் பகுதி கட்டட கட்டுமானத்துக்கு மணல் தேவையை கருத்தில்கொண்டு, புதுச்சேரி அரசு வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது. 
அதன்படிபொதுப்பணித் துறை நிர்வாகம் சட்ட நெறிமுறைகளை உருவாக்கியது. முதல் முறையாக அபான் மார்கெட்டிங் எனும் தனியார் நிறுவனம் மலேசியாவிலிருந்து 54 ஆயிரம் டன் மணலை கப்பலில் கொண்டுவர ஏற்பாடு செய்து, கடந்த மே மாதம் தொடக்கத்தில் காரைக்கால் துறைமுகத்துக்கு மணல் கொண்டு வந்து குவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட  ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா மற்றும் பொதுப்பணித் துறையினர் துறைமுகத்துக்குச் சென்று அந்த மலேசிய மணலை ஆய்வு செய்தனர். கட்டுமானத்துக்கு உகந்ததுதானா என்பதை பரிசோதிக்கும் வகையில் மணல் புதுச்சேரி ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் தர ஆய்வு அறிக்கையும் வெளியானது. மணல் கட்டுமானத்துக்கு உகந்தது என தர ஆய்வு தெரிவித்திருப்பதாகவும், புதுச்சேரி அரசு, நிறுவனத்துக்குத் தரவேண்டிய அனுமதியை தந்துவிட்டதாகவும், மணலை இறக்குமதி செய்த நிறுவனமே விலை நிர்ணயம் செய்து விற்பனையை தொடங்குமென கடந்த மாதம் காரைக்கால் வந்த புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தார்.
உரிய அனுமதி பெற்றும் நிறுவனம் மணலை விற்பனைக்கு ஏற்பாடு செய்யாமல் முடக்கிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. மணல் விற்பனைக்கு வரும்பட்சத்தில், தமிழகப் பகுதியிலிருந்து அதிக விலை கொடுத்து, தடையை மீறி மணல் கொண்டுவரும் போக்கு குறையுமென கட்டுமானத்தில் ஈடுபடும் பொறியாளர்கள் மற்றும் அரசு தரப்பின் கட்டுமானத்தை செய்வோர் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, காரைக்கால் துறைமுக உதவி துணைத் தலைவர் ராஜேஷ்வர்ரெட்டி கூறியது: வெளிநாட்டிலிருந்து மணல் இறக்கும் தளம்தான் துறைமுகம். இதன் பிறகு இறக்குமதி செய்த நிறுவனமே விற்பனைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து செயல்பட வேண்டும்.
அதற்கான பணிகளை அந்நிறுவனம் செய்துவருவதாக தெரிகிறது. கூடுதலாக மணல் மே மாதத்துக்குப் பிறகு இறக்குமதி செய்யப்படவில்லை என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா கூறியது: மணல் தர ஆய்வு அறிக்கை வந்துவிட்டது. புதுச்சேரி அரசு தரப்பில் நிறுவனத்துக்கு தரும் அனுமதிகளும் தரப்பட்டுவிட்டன. இதன் பிறகு இறக்குமதி செய்தோர்தான் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com