தியாகராஜருக்கு பிராயச்சித்த அபிஷேகம்
By DIN | Published On : 14th June 2019 07:41 AM | Last Updated : 14th June 2019 07:41 AM | அ+அ அ- |

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் செண்பக தியாகராஜ சுவாமிக்கு பிராயச்சித்த அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. செண்பக தியாகராஜ சுவாமி, நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து, இரவு 9 மணியளவில் தேரிலிருந்து செண்பக தியாகராஜ சுவாமி, சுப்ரமணியர் சன்னிதிக்கு அருகே உள்ள எண்ணெய்க்கால் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் செண்பக தியாகராஜ சுவாமி, நீலோத்பாலாம்பாளுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மரகத லிங்கம் கொண்டுவரப்பட்டு, தியாகராஜர், நீலோத்பாலாம்பாள் மற்றும் மரகத லிங்கத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மரகத லிங்கம் பாதுகாப்பு பெட்டகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த அபிஷேகம் குறித்து சிவாச்சாரியர் கூறும்போது, "தேரில் வீதியுலா சென்று வந்த சுவாமிக்கு இந்த அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஐதீக முறைப்படி, குறிப்பாக அபிஷேகத்தில் எண்ணெய் பயன்பாடு அதிகமாக இருக்கும். வெந்நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, சுவாமிகளின் கை, கால் பகுதியை பிடித்துவிடப்படுகிறது. உன்மத்த நடனத்தில் தேருக்கு எழுந்தருளி, உலா முடிந்து வந்தவருக்கு செய்யப்படும் முறையாகும் இது என்றார்.
தொடர்ந்து எண்ணெய்க்கால் மண்டபத்திலிருந்த செண்பக தியாகராஜர் உன்மத்த நடனத்தில் இரவு யதாஸ்தானத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார்.