திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் ஆடைகளை விட்டுச் செல்ல ஜூலை 1 முதல் தடை?

திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்தில் நீராடும் பக்தர்கள், குளத்திலேயே ஆடைகளை விட்டுச் செல்வதற்கு ஜூலை 1 முதல் தடை விதிக்க கோயில்


திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்தில் நீராடும் பக்தர்கள், குளத்திலேயே ஆடைகளை விட்டுச் செல்வதற்கு ஜூலை 1 முதல் தடை விதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திருநள்ளாறு நளன் தீர்த்தக் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவதும், உடுத்தியிருக்கும் ஆடைகளை குளத்தில் விட்டுச் செல்வதன் மூலம் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்குளத்தின் நீர் தேவைக்காக அருகருகே ஆழ்குழாய் அமைத்து, தண்ணீர் நிரப்பும் பணியை கோயில் நிர்வாகம் செய்கிறது. நளன் தீர்த்தக் குளத்தைப் பொருத்தவரை எண்ணெய் தேய்த்து நீராடுவதாலும், உடலில் எண்ணெய் சுத்தமடைய சோப்புகள் பயன்படுத்துவதாலும் தண்ணீர் சுகாதாரக் கேடு அடைவதாகக் கூறப்பட்டுவருகிறது.
ஆடைகளை விட்டுச் செல்லுதல்: சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை பக்தர்களிடையே அதிகமாக  இல்லை, சில பக்தர்கள் தோஷ நிவர்த்திக்காக உடைகளை குளக்கரையில் வைத்துவிட்டுச் சென்றதாகவும், காலப்போக்கில் இச்செயல் அதிகரிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் பக்தர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளை குளக்கரையில் வைக்கவேண்டும், தண்ணீரில் விடக்கூடாது எனவும் ஆங்காங்கே தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை பெரும்பான்மையினர் பொருட்படுத்துவதில்லை. குளக்கரையிலும், குளத்தில் மிதக்கும் துணிகளை, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அகற்றுகின்றனர். குளத்தில் உள்ள தண்ணீர் சுகாதாரமற்றது என்பது உறுதியாகிறது. இதனால் தண்ணீரை அடிக்கடி வெளியேற்றுவதையும், ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் நிரப்புவதையும் செய்கிறார்கள். இதன் காரணமாக ஆண்டுக்கு பல கோடி லிட்டர் நிலத்தடி நீர் வீணாகிறது.
துணிகளை அப்புறப்படுத்த ஒப்பந்தம்: ஒவ்வொரு ஆண்டும் குளக்கரையிலிருந்து துணிகளை எடுக்க தனியாரிடம் கோயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துகொள்கிறது. ஒப்பந்தம் எடுத்தோர், துணிகளில் தரமானவற்றை விற்பனை செய்துவிடுகிறார்களாம். பயனற்றவை திருநள்ளாறில் ஒரு பகுதியில் குவித்து வைத்திருக்கிறார்களாம். இதனை புதைப்பதா, எரியூட்டுவதா என்றே தெரியாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருநள்ளாறு கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் நீதிபதிகள் பலரும், நளன் குளத்தின் புனிதத்தைக் காக்கவும், குளத்தில் உடைகளை விட்டுச் செல்வதை தடுக்கவும் கோயில் நிர்வாகத்துக்கு யோசனை தெரிவித்துச் செல்கின்றனர். இதை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் முனைப்பாக செயல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏலம் நிறுத்தம்: கோயில் நிர்வாகம் சார்பில் நளன் குளத்தில் துணிகளை எடுக்க ஓராண்டுக்கான ஏலமும், நளன் கலி தீர்த்த விநாயகர் கோயில் அருகே தேங்காய் உடைக்கும் போது குவியும் தேங்காய்களை எடுக்கும் ஏலமும் நடத்துவது வழக்கம். நிகழாண்டுக்கான ஏலம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வழக்கமாக இரு பணிகளுக்கும் ஒரே நாளில் ஏலம் நடைபெறும் சூழலில், 27-ஆம் தேதி துணிகளுக்கான ஏலத்தை கோயில் நிர்வாகம் கைவிட்டுள்ளது. இது, நளன் குளத்தில் துணிகளை போடாமல் இருப்பதற்காக கோயில் நிர்வாகம் செய்யும் முன்னேற்பாடுகள் என்றே பேசப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரும், தர்பாரண்யேசுவரர் கோயில் தனி அதிகாரியுமான ஏ.விக்ரந்த் ராஜாவிடம் வெள்ளிக்கிழமை கேட்டபோது, ஜூன் 27-ஆம் தேதி நளன் குளத்தில் துணி எடுப்பதற்கான ஏலம் இல்லை. குளத்தின் புனிதத்தன்மையைக் காக்க பல்வேறு தரப்பினர் கோயில் நிர்வாகத்துக்கு யோசனை கூறிவருகின்றனர். சோதனை முறையில் சில முயற்சிகளை மேற்கொள்ளலாமென யோசித்துவருகிறோம் என்றார். ஜூலை மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நளன் குளத்தில் துணிகளை பக்தர்கள் விட்டுச் செல்ல மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் தடை விதிக்கவே இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக நம்பக் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com