அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அலட்சியம்: நூற்பாலை நிர்வாகம் மீது தொழிலாளர்கள் புகார்

நெடுங்காடு நூற்பாலை நிர்வாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து

நெடுங்காடு நூற்பாலை நிர்வாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும், ஊதியம் வழங்குவதிலும் அலட்சியம் காட்டப்படுவதாக தொழிலாளர்  துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு சௌந்தரராஜா மில்ஸ் தொழிலாளர் நல்வாழ்வுச் சங்கத்தின் நிர்வாகிகள், காரைக்கால் தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய மனு குறித்து சங்கத்தின் கௌரவத் தலைவர் க.தேவமணி செவ்வாய்க்கிழமை கூறியது :
நெடுங்காட்டில் இயங்கும் இந்த நூற்பாலையில் சுமார் 400 உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் காலதாமதமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இஎஸ்ஐ நிதியைக் கட்டாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை விதிகளின்படி கேண்டீன் அமைக்க வேண்டும். ஆனால், இந்த ஆலையில் கேண்டீன் வசதி இல்லை. இரவு நேரத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேநீர் நிறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை. இரவு பணியின்போது மின் தடை ஏற்படும்பட்சத்தில், ஜெனரேட்டர் வசதியோ, அவசர நிலை பயன்பாட்டு விளக்கோ அமைத்து தரப்படவில்லை.  பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு செய்து தரும் வசதிகள் இச்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தரப்படுவதில்லை. இதுகுறித்து பல நிலைகளில் புதுச்சேரி தொழிலாளர் துறை தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தவொரு நடவடிக்கையுமின்றி, தொழிலாளர் துறை நிர்வாகம் ஆலைக்கு சாதகமான வகையிலேயே செயல்பட்டுவருகிறது. தொழிலாளர் துறையின் இந்த போக்கு ஆரோக்கியமானதாக இல்லை. இதே நிலை நீடித்தால் ஆலை நிர்வாகம், தொழிலாளர் துறையைக் கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com