நில ஆர்ஜித தொகை விவகாரம்: வருவாய்த்துறை சாதனங்கள் ஜப்தி உத்தரவு அதிகாரிகளிடம் அளிப்பு

நில ஆர்ஜித தொகை வழங்காமல் வருவாய்த்துறை இழுத்தடித்த விவகாரத்தில், வருவாய்த்துறை சாதனங்களை

நில ஆர்ஜித தொகை வழங்காமல் வருவாய்த்துறை இழுத்தடித்த விவகாரத்தில், வருவாய்த்துறை சாதனங்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் வழங்கிய உத்தரவு வருவாய்த் துறையினரிடம் வழங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், தருமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜிமுகமது மரைக்காயர். இவருக்கு சொந்தமான நிலத்தைக் கடந்த 2007-ஆம் ஆண்டு நெல்லி வாய்க்கால் பயன்பாட்டுக்காக  பொதுப்பணித்துறைக்காக வருவாய்த்துறை நிலத்தை ஆர்ஜிதம் செய்து வழங்கியது.
இதற்கு அரசு கட்டணப்படி தொகை நில உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகை போதுமானது அல்ல என்றும், தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி ஹாஜிமுகமது மரைக்காயர் கடந்த 2010-ஆம் ஆண்டு காரைக்கால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு, குழிக்கு ரூ.3,500 வீதம் வழங்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.  நீதிமன்ற உத்தரவின்படி தொகை வழங்காமல் காரைக்கால் வருவாய்த்துறை இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு ஹாஜிமுகமது மரைக்காயர், காரைக்கால் நீதிமன்றத்தில் உரிய தொகை வழங்க காலதாமதப்படுத்தி வருவதால், உடனடியாக வழங்கவோ அல்லது ஜப்தி நடவடிக்கை எடுக்கவோ உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், வரும் 24-ஆம் தேதிக்குள் வருவாய்த்துறை அலுவலகத்தில், துணை ஆட்சியர் (வருவாய்) பயன்படுத்தும் கார் மற்றும் அலுவலகத்தில் உள்ள மரப்பொருள்கள், கணினிகள் உள்ளிட்டவைகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற ஊழியர் (அமீனா) விஸ்வநாதன், மனுதாரர் ஹாஜிமுகமது மரைக்காயர் ஆகியோர் வருவாய்த்துறை அலுவலகத்துக்கு சென்று ஜப்தி செய்வதற்கான உத்தரவு நோட்டீஸை வழங்கச் சென்றனர். அப்போது வாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த வருவாய்த்துறை ஊழியர்கள், அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் சமாதானம் செய்து உள்ளே சென்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நீதிமன்ற ஆணையை வழங்கினர்.
இதுகுறித்து மனுதாரர் ஹாஜிமுகமது மரைக்காயர் கூறும்போது, எனது சொந்த இடத்தை எடுத்துக்கொண்டு உரிய தொகை வழங்காமல் வருவாய்த்துறையினர் இழுத்தடித்து வருகின்றனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஜப்தி ஆணையை நீதிமன்ற ஊழியர் வழங்கியுள்ளார். இதன் பிறகு உரிய தொகையை வழங்க வருவாய்த்துறை முன்வராவிட்டால், நீதிமன்றத்துக்கு மீண்டும் சென்று உரிய பாதுகாப்புகளுடன் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com