காரைக்கால் வாரச் சந்தைக்கு கோலாரிலிருந்து  தக்காளி வரத்து: விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி

கோடை வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்து, காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ள

கோடை வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்து, காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், காரைக்கால் வாரச் சந்தைக்கு கோலாரிலிருந்து கொண்டுவரப்பட்ட தக்காளி கிலோ ரூ.30-க்கு  விற்பனையானது. இதனால், மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி ஏற்பட்டது.
கோடை காலத்துக்கு முன்னதாக தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், நிகழாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடும் வறட்சி ஏற்பட்டு தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கனிகளின் விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதனால், தக்காளி கிலோ  ரூ.50-ஐ கடந்தும், வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்தும் காணப்பட்டது.
தக்காளியைப் பொருத்தவரை கிலோ ரூ. 60 வரை விலை உயர்ந்து, பின்னர் ரூ.50,  ரூ. 40 என கடந்த ஒரு மாதமாக படிப்படியாக விலை குறையத் தொடங்கியது. சமையலில் முக்கிய பங்குவகிக்கும் தக்காளியின் விலையில் சரிவு ஏற்படத் தொடங்கியது மக்களிடையே ஓரளவுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காரைக்கால் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) தக்காளி விலை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், சந்தைக்கு காய்கனிகள் வாங்க வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் தக்காளியை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து, வியாபாரி ஒருவர் கூறியது: பொதுவாக தமிழகத்துக்கு வரக்கூடிய தக்காளி, பிற மாநிலங்களுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டதும், கோடையில் உற்பத்தி குறைவும் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம். தற்போது கர்நாடக மாநிலம் கோலாரிலிருந்து தக்காளி தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. இதன் வரத்து மிகுதியால் கிலோ ரூ.30 விலையில் விற்க முடிகிறது. பிற இடங்களில் இருந்து வரத்து மிகுதியாகும்போது, அடுத்த சில வாரங்களில் மேலும் விலை குறையும் என நம்பிக்கையுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com