சிறுவர் இலக்கியச் சந்திப்பு பரிசளிப்பு
By DIN | Published On : 04th March 2019 12:51 AM | Last Updated : 04th March 2019 12:51 AM | அ+அ அ- |

காரைக்காலில் சிறுவர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி சிறுவர் இலக்கிய இயக்கம் சார்பில் காரைக்காலில் சிறுவர் இலக்கியச் சந்திப்பு 51 -ஆவது நிகழ்வு பண்டாரவாடை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பாரதிவாணர் சிவா நோக்கவுரையாற்றினார்.
பண்டாரவாடை அரசு தொடக்கப் பள்ளி, வளத்தாமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி, அம்பகரத்தூர் அரசு தொடக்கப் பள்ளி, நல்லெழுந்தூர் அரசு தொடக்கப் பள்ளி, சேத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றிலிருந்து 60 சிறுவர், சிறுயர் பங்கேற்றனர்.
கதை சொல்லுதல், பாடல் பாடுதல், தனி நடிப்பு, விடுகதை, பொன் மொழி கூறுதல், அறிவியல் செய்திகள், திருக்குறள், விரும்பிய தலைப்பில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் சிறுவர்கள் பங்கேற்று திறனை வெளிப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியை லெயோனிமாணிக்கம் கலந்து கொண்டு பாராட்டிப் பேசினார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பங்கேற்ற சிறுவர்களில் சிறப்பான முறையில் பெற்றோரை பேணிக்காப்பது தொடர்பாக தனி நடிப்பை வெளிப்படுத்திய பண்டாரவாடை அரசு தொடக்கப்பள்ளி மாணவர் சா. ஆன்ட்ரோ ரியாசுக்கு குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா சுழற்கேடயம் வழங்கப்பட்டது.
பண்டாரவாடை பள்ளி பொறுப்பாசிரியர் செல்வராஜ், நல்லாசிரியர் ந. ஆறுமுகம், தலைமையாசிரியர் (ஓய்வு) ஆதிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாணவப் பருவத்திலேயே இலக்கியம் தொடர்பான ஆற்றலை வளர்த்துக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் எந்த துறையிலும் சிறந்து விளங்குவதற்கு அவர்களுக்கு வாய்ப்பாக அமையும் என்பதை கருத்தில்கொண்டே இந்த நிகழ்வை தொடர்ந்து நடத்திவருவதாக இலக்கிய இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.