மக்களவைத் தேர்தல்: வங்கி அதிகாரிகளுடன் தேர்தல் துறையினர் ஆலோசனை
By DIN | Published On : 24th March 2019 01:10 AM | Last Updated : 24th March 2019 01:10 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுடன் தேர்தல் துறையினர், வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ. விக்ரந்த் ராஜா தலைமை வகித்தார். வருமான வரித் துறை துணை ஆணையர் யாசர் அராபத், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்தல் நடத்தை விதிகளில் பணப் பரிமாற்றம் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியும், வருமான வரித் துறையினரும் வங்கியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. ஒவ்வொரு வங்கியிலும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அதிகப்பட்சமாக பணம் எடுக்க நேரிட்டால் அல்லது வேறு கணக்குக்கு பரிமாற்றம் செய்தால் அதன் விவரம் தினமும் மாவட்டத் தேர்தல் அதிகாரியின் இமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. வருமான வரித் துறையினரும் உரிய விதிகளை சுட்டிக்காட்டி, வங்கியாளர்களின் ஒத்துழைப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தேர்தலில் வாக்குப் பதிவு நாள் வரை வங்கியாளர்கள் பணப் பரிமாற்றத்தில் சிறப்பு கண்காணிப்பை செய்யவேண்டும் என்று தேர்தல் துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மாவட்டத் துணை தேர்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அதிகாரி கே. ரேவதி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து
கொண்டனர்.