அரசு மருத்துவமனை மேம்பாட்டுத் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தல்

ஜிப்மர் நிர்வாகம் மூலம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் திட்டத்துக்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என

ஜிப்மர் நிர்வாகம் மூலம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் திட்டத்துக்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என புதுச்சேரி அரசை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை நீண்ட காலமாகவே சிகிச்சை முறைகளில்  மேம்பாடின்றி பின்தங்கியே உள்ளது. விபத்து சிகிச்சை, இருதய சிகிச்சை போன்ற அவசர சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் இல்லாததும், உயர்தர மருத்துவ வசதி இல்லாததும் காரைக்கால் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.
மருத்துவமனை அவல நிலையை புதுச்சேரி அரசின் கவனத்துக்கு சட்டப்பேரவை கூட்டத் தொடர் விவாதத்தின் மூலமாகவும், முதல்வர், சுகாதார அமைச்சரின் நேரடி கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன். ஜிப்மர் நிர்வாகத்தின் நிதியுதவியில் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.30 கோடியில் ஜிப்மர் நிர்வாகம் திட்டம் வகுத்து, திட்டப்பணிகளை மேற்கொள்ள டெண்டர் விட்டது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளால் பணி ஆணை தரப்படாமல் நிலுவையில் உள்ளது.
எனவே, நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவரும் வேளையில், பணி ஆணை தரவும், பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்கவும், மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் பணி செய்யும் சூழலையும் புதுச்சேரி அரசு உருவாக்கவேண்டும். பிற மாநிலங்களில் மருத்துவமனையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளதுபோல, காரைக்கால் மருத்துவமனையிலும் ஆட்சியர் தலைமையில் நிர்வாகக் குழு அமைத்து, சிறப்பு வார்டு, ரத்த வங்கி போன்ற பிற நிலைகளில் கிடைக்கும் வருவாயை, மருத்துவமனை மேம்பாட்டுக்கு பயன்படுத்திடவும், மருத்துவமனைக்கு நிர்வாகக் குழு உரிய ஆலோசனைகள் வழங்கும் விதத்தில் குழுவை புதுச்சேரி அரசு அமைக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com