சாலையோரங்களில் கருவேல மரங்களை அழிக்க வலியுறுத்தல்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்குச் செல்லும் பாதை கருவேல மரங்களுக்கிடையே உள்ளதாகவும்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்குச் செல்லும் பாதை கருவேல மரங்களுக்கிடையே உள்ளதாகவும், மீன்பிடித் தடைக்காலத்தை பயன்படுத்தி, இந்த சாலையோர கருவேல மர புதரை மாவட்ட நிர்வாகம் அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு கருக்களாச்சேரி கிராமத்துக்குச் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து கிழக்குப்புறமாக செல்லும் சாலையில் பயணிக்கும் வகையில் அமைப்பு உள்ளது. கருக்களாச்சேரி பிரதான சாலையிலிருந்து சுமார் 300 மீட்டர் தூர தார்ச் சாலை வழியே துறைமுகத்துக்குச் செல்லவேண்டும். இந்த சாலையின் இடதுபுறத்தில் கடலோரக் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தையும் மறைத்தாற்போல் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. 
கருவேல மரங்கள் சாலையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ளதாலும், இரவு நேரத்தில் துறைமுகத்துக்குச் செல்லும் சாலையின் மின்விளக்குகள் ஒளிராமல் போவதாலும், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் துறைமுகத்துக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கருவேல மரங்களுக்கிடையே துறைமுகச் சாலை இருப்பதால், இரவு நேரத்தில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதும், நடந்து செல்வோர் அச்சப்படும் நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
கடலோரக் காவல் நிலையமும், மீன்பிடித் துறைமுகத்துக்கும் இந்த சாலையின் வழியே பயணிக்கும் நிலை இருக்கும்போது, இவ்விரு கட்டடங்களே கண்ணுக்குப் புலப்படாத வகையில் கருவேல மரங்கள் மண்டிக்கிடப்பது வேதனை தருகிறது என மீனவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியது: மீன்பிடித் தடைக் காலம் 61 நாள்கள் என்ற நிலையில் துறைமுகத்துக்கு பயணிப்போர் வெகுவாக குறைந்திருக்கும் சூழலில், இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்தி, துறைமுக சுற்றுவட்டாரத்தில் கருவேல மரங்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
இந்த நிலப்பரப்பு தனியாருடையதாக இருந்தால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சீர்செய்ய அறிவுறுத்தவேண்டும். துறைமுகத்துக்கு மீனவர்கள் மட்டுமல்லாது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிறிய மீன் வியாபாரிகள் வந்து செல்வதால், அவர்களது பாதுகாப்பை கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com