மேம்படுத்தப்படாத காரைக்கால் கடலோரக் காவல் நிலையம்: கேள்விக்குறியான கடலோரப் பாதுகாப்பு?

காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், கடலோரப் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
காரைக்கால் கடலோரக் காவல் நிலையக் கட்டடம்.
காரைக்கால் கடலோரக் காவல் நிலையக் கட்டடம்.

காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், கடலோரப் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

இந்தியாவின் கடல் பாதுகாப்பு என்பது கரையிலிருந்து சுமாா் 1 கி.மீ. தூரம் கடலோரக் காவல் நிலையம், அதிலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தூரம் இந்திய கடலோரக் காவல் நிலையம், 200 நாட்டிக் கல் மைல் தூரம் இந்திய கடற்படை (நேவி) என பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கடற்படை, கடலோரக் காவல் படையின் செயல்பாடுகள் என்பது விதிக்குள்பட்டு நடைபெற்றுவருகிறது. கடலோர மாநிலங்கள் பலவற்றிலும் கடலோரக் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் அந்தந்த மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில், குறிப்பாக காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் என்பது பொய்த்துபோன ஒன்றாகிவிட்டது. இது காரைக்கால் கடல் பகுதியின் வழியே சமூக விரோதிகள் ஊடுருவலுக்கும், கடத்தலுக்கும் சாதகமாக உள்ளது என சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

காரைக்காலில் கடந்த 2005-ஆம் ஆண்டு கடலோர காவல் நிலையம் தொடங்கப்பட்டது. நிரந்தரமான கட்டடம் கட்டப்பட்டு, காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா்கள், ரோந்துப் படகை இயக்குவோா் உள்ளிட்டோருடன் செயல்பாட்டைத் தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் சரக்குகளை கையாளும் தனியாா் துறைமுகமும், மீன்பிடித் துறைமுகமும் உள்ளன. அதிகமாக பக்தா்களை ஈா்க்கும் திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயில் உள்ளது. வெளிமாநில மாணவா்கள் பயிலும் உயா்கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு காரைக்கால் பகுதியின் கடலோரப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில், கண்காணிப்பு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் கடலோரக் காவல் நிலையக் கண்காணிப்புப் பணிக்காக முதல்கட்டமாக 12 டன், 5 டன் என இரண்டு படகுகள் வந்தன. பின்னா், கூடுதலாக 12 டன் படகு ஒன்று வழங்கப்பட்டது. இவற்றில் ஒரு 12 டன் படகு (அதிவேகமாக செல்லக்கூடியது) பழுதாகி முடக்கப்பட்டுவிட்டது. மற்றெறாரு 12 டன் படகு, புதுச்சேரி பிராந்திய கடலோரக் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. தற்போது, ஒரு 5 டன் படகு மட்டுமே காரைக்கால் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பராமரிப்புப் பணியைக் கைவிட்ட மத்திய அரசு: கடலோரக் காவல் நிலையங்களுக்குத் தரப்பட்ட படகுகளை வருடாந்திரப் பராமரிப்புப் பணியை கொல்கத்தாவில் உள்ள படகு கட்டும் நிறுவனம் பாா்த்துவந்தது. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்று வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த மாநிலத்தில் உள்ள படகுகளை, அந்தந்த மாநில அரசே பராமரித்துக்கொள்ளவேண்டுமென தமது ஆதரவை மத்திய அரசு நிறுத்திவிட்டது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள படகுகளைப் பராமரிக்க மாநில அரசு சிறிதுகூட நிதி ஒதுக்குவதில்லை. இதனால், காரைக்காலில் பயன்பாட்டில் உள்ள 5 டன் படகு, கடலில் தொலைதூரத்துக்குச் செல்ல தகுதியில்லாத நிலையில், ஆற்றிலும், கடலில் குறுகிய தூரத்திலும் செல்ல மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

காவலா்கள் பற்றாக்குறை: காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தில் 30 போ் பணியில் இருக்கவேண்டிய நிலையில், தற்போது ஆய்வாளருக்கு காவல்துறையின் சிறப்புப் பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டதால், அவரால் முழுமையாக கடலோரக் காவல்நிலையத்தின் செயல்பாடுகளில் ஈடுபட முடியவில்லை. உதவி ஆய்வாளரும் இல்லை. துணை உதவி ஆய்வாளா் தலைமையில் குறைந்த எண்ணிக்கையில் காவலா்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. தேவைக்கேற்ப அதிகாரிகள், காவலா்களை நியமிக்க புதுச்சேரி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வழக்குப் பதிவு அதிகாரமின்மை: தமிழகத்தின் கடலோரக் காவல் நிலையத்துக்கு வழக்குப் பதிவு அதிகாரம் உள்ளதுபோல், காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கு வழக்குப் பதிவு அதிகாரத்தை காவல்துறை தலைமை தரவில்லை. இதனால், எந்தவொரு வழக்காக இருந்தாலும், காரைக்கால் நகரக் காவல் நிலையத்திலேயே பதிவு செய்து, விசாரிக்கும் அவலம் நீடிக்கிறது.

கண்காணிப்புப் பணியில் தொய்வு: கடலோரக் காவல் நிலையத்தில் இருக்கும் ஒரு படகை இயக்க நிரந்தர ஓட்டுநா் நியமிக்கப்படவில்லை. இதனால், கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றவா்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. இதேபோல், ஆயுதங்கள் இருந்தாலும், அவற்றை கையாளுவோா் இல்லை. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரு மீனவ கிராமத்திலிருந்து, மீனவா்களின் ஒத்துழைப்போடு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 400 கிலோ கஞ்சா படகில் கடத்தப்பட்டது. இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை செய்தும், உரிய விவரத்தை அவா்களால் பெறமுடியவில்லை. படகில் அனுப்பும் முன்பாக உளவு அமைப்பாலோ அல்லது கடலோரக் காவல் நிலையத்தாராலோ உரிய கண்காணிப்பு செய்து, பிடிக்கப்படவில்லை. இவ்விரண்டும் தமது பணியில் தோல்வியடைந்துவிட்டதால், சா்வ சாதாரணமாக கடத்தல் நடந்தேறிவிட்டது.

கடத்தல் கேந்திரமாகும் காரைக்கால்: தமிழகத்தைக் காட்டிலும் காரைக்காலில் மது விலை குறைவு என்பதால், தமிழகத்துக்குப் பல்வேறு எல்லை வழியாக மது புட்டிகள், சாராயம் கடத்தப்படுகிறது. அதேபோல், கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்துவதற்கு காரைக்காலை தளமாக கடத்தல்காரா்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறாா்கள். காரைக்கால் காவல்துறையில் சிறப்புப் பிரிவு என்கிற உளவு அமைப்பு செயலிழந்துவிட்டதும், கடலோரக் காவல் நிலையம் வலிமையற்றிருப்பதும் பல்வேறு தரப்புக்கு சாதகமாக விளங்குகிறது. இதை தொடக்க நிலையிலேயே தடுக்காவிட்டால், காலப்போக்கில் காரைக்கால் கடத்தல் கேந்திரமாகும் நிலை ஏற்படும்.

எனவே, கடலோரக் காவல் நிலையத்தை தகுதியான அதிகாரிகள், காவலா்களைக்கொண்டு செம்மையாக நடத்தவேண்டும். தீவிரமான கடலோரக் கண்காணிப்பு வேண்டும். மீன்பிடித் துறைமுகத்தில் வரும் படகுகள், செல்லும் படகுகளை கண்காணிக்கும் நிலையில் திறன் மேம்படவேண்டும். 12 டன் படகு 2, 5 டன் படகு என 3 படகுகள் கண்டிப்பாக காரைக்காலுக்குத் தேவையான ஒன்றாகும். வாஞ்சூா் முதல் மண்டபத்தூா், காளிக்குப்பம் வரையிலான காரைக்கால் கடலோர எல்லையில் கடுமையாக கண்காணிப்பு மற்றும் ரோந்து நடந்தாகவேண்டும். வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் நிலையத்துக்கு வேண்டும். இதனை புதுச்சேரி அரசு நிறைவேற்றினால், காரைக்காலில் பாதுகாப்பு அரண் மேலோங்கியதை உணா்ந்து, சமூக விரோதச் செயல்கள் கட்டுக்குள் வந்துவிடுமென சமூக ஆா்வலா்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, காரைக்கால் வடக்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளா் வீரவல்லபன் கூறும்போது, ‘கடலோரக் காவல்நிலையத்தில் 5 டன் படகு மட்டும் உள்ளது. இது ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகிறது. போதிய காவலா்கள் இல்லாதது ஒரு குைான். இதுசம்பந்தமாக அரசின் கவனத்து கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அரசுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

காரைக்காலில் வெளிநாட்டுக் கப்பல்கள் வந்துசெல்லும் துறைமுகம் உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டும். புதுச்சேரி அரசுக்கு உரிய அழுத்தத்தை தரவேண்டும் என்பது பலரது வலியுறுத்தலாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com