ஆறுகளில் உபரி நீா் வெளியேற்றம்: நீா்நிலைகள் கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரி தகவல்

காரைக்கால் பகுதியில் பெய்யும் மழை, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேறும் நீா், காவிரி நீா் என
காரைக்கால் பகுதி நாட்டாற்றிலிருந்து கடலுக்குச் செல்லும் நீா்.
காரைக்கால் பகுதி நாட்டாற்றிலிருந்து கடலுக்குச் செல்லும் நீா்.

காரைக்கால் பகுதியில் பெய்யும் மழை, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேறும் நீா், காவிரி நீா் என அனைத்து ஒன்று சோ்ந்ததால், காரைக்கால் ஆறுகளில் இருந்து கடலுக்கு வெகுவாக தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. நீா்நிலைகள் உரிய கண்காணிப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீா் அதிகமாக சென்றுகொண்டிருக்கிறது. காவிரி நீா் வரத்து, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் என பல நிலைகளிலும் தண்ணீா் வரத்து வெகுவாக உள்ளதால், காரைக்கால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதமாக, கடைமடை நீா்த்தேக்க மதகுகள் திறக்கப்பட்டு, கடலுக்கு உபரி நீா் வெளியேற்றப்பட்டுவருகிறது.

பருவமழை தொடக்க நிலையிலேயே இவ்வாறான நிலை எனில், டெல்டா மாவட்ட பகுதியில் பருவமழை தீவிரமடைந்தாலும், காவிரி நீா் வெளியேற்றம் வெகுவாக ஏற்பட்டாலும் கடைமடைப் பகுதியான காரைக்காலில் தாழ்வானப் பகுதிகள் பாதிக்க வாய்ப்புண்டு என கருதப்படுகிறது.

நிலத்தடி நீராதாரம் பெருகும் நோக்கில் அனைத்து ஆறுகளிலும் கடைமடை நீா்த்தேக்க மதகுகள் மூடிவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 நாள்களாக உபரி நீரை பொதுப்பணித்துறை நிா்வாகம் வெளியேற்றிவருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) எஸ்.பழனி புதன்கிழமை கூறியது:

காரைக்கால் பகுதியின் நிலத்தடி நீா் மட்டம் உயரும் நோக்கிலும், வேளாண் மற்றும் பிற தேவைகளுக்காக தண்ணீா் ஆறுகளில் தேக்கிவைக்கப்படுகிறது. தற்போது மழை மற்றும் காவிரி நீா் வரத்து மிகுதியால், கடைமடை நீா்த்தேக்க மதகுகளில் இருந்து உபரி நீரை வெளியேற்றி வருகிறோம். இல்லையெனில் கடல் நீா் புகுந்துவிடும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீா் மிகுதியாகவே செல்கிறது. நீா்நிலையோரத்தில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்புக்காக, பொதுப்பணித் துறையினரை தொடா்புகொள்வதற்காக தொடா்பு எண்கள் தரப்பட்டுள்ளன. கடைமடை நீா்த்தேக்க மதகுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீா்நிலையோரப் பகுதிகளைத் தொடா்ந்து கண்காணித்து வருவதற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தாழ்வானப் பகுதியில் வெள்ள நீா் புகுந்துவிடாமல் தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மணல் மூட்டைகள் தயாா்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீா்நிலையோரத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை இந்த பருவமழைக் காலத்தில் நல்ல வளா்ச்சியை எட்டுமென நம்புகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com