தண்ணீர் வசதி குறைபாட்டுடன் செயல்படும்  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: மனிதநேய மக்கள் கட்சி புகார் 

காரைக்கால் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் தண்ணீர் வசதி குறைபாடு நிலவுவதாக மமக புகார் கூறியுள்ளது.

காரைக்கால் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் தண்ணீர் வசதி குறைபாடு நிலவுவதாக மமக புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் அ. ராஜா முகம்மது திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகம் தோமாஸ் அருள் தெரு, விளையாட்டு அரங்கம் அருகே புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் ஆண்கள், பெண்கள் என பலரும் பணி நிமித்தம் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கத் தொடங்கியது முதல் முறையாக தண்ணீர் விநியோகம் இல்லை. வெளியிலிருந்து டேங்கர் மூலமே தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
அலுவலகத்துக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் மற்றும் ஊழியர்கள் அங்குள்ள கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாமல் பெரும் அவதிப்படுகின்றனர். கட்டடத்துக்கு தண்ணீர் விநியோகம் இல்லாததன் காரணத்தை அறிந்து, அதை சரிசெய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிரந்தர ஆய்வாளர் இல்லாததால் பல்வேறு பணிகள் மந்தமாக நடைபெறுகின்றன. ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்களுக்கு  ஒரு நாளில் நடைபெற வேண்டிய  பணிகளுக்கு 3 நாள்கள் அலையவேண்டியுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் புதுச்சேரியிலிருந்து நியமிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தலையிட வேண்டும்.  வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்துக்கு நாள்தோறும் ஆய்வுக்காக நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அலுவலகத்தின் முன் பகுதிகள் செம்மண் மட்டுமே நிரப்பப்பட்டு தார்ச்சாலை அமைக்காமல் இருப்பதால் சிறு மழைக்கே வாகனங்கள் வந்து செல்வதற்கும், அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கும் மிகவும் சிரமப்படும் வகையில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே, இந்த வளாகத்தை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com