அரசுப் பள்ளிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதி: புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்குமா ?

காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான விரிவுரையாளர்கள் பற்றாக்குறையாக

காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான விரிவுரையாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் தவித்து வருகின்றனர். 
புதுச்சேரி மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் முதல்வர், விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்கள் ஏராளம் உள்ளன. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும்  குடும்பத்தினர் கல்வித் தரம் வேண்டி அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்துவிடுகின்றனர். நடுத்தர, ஏழை வர்க்கத்தினர் தமது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மேம்படவேண்டும், மாணவர்கள் பரந்த அறிவாற்றலை பெறவேண்டும், ஆசிரியர்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என அரசு விழாக்களில் முதல்வர், அமைச்சர் போன்றோர் ஆலோசனை வழங்கி நீண்ட உரையாற்றுகின்றனர்.  பள்ளிகளில் தலைமையாசிரியரோ, முதல்வரோ இல்லாமல் இருந்தால் நிர்வாகத்தில் குறைபாடு ஏற்படும். ஆசிரியர்கள் இல்லாமல் போனால், மாணவர்களால் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும். அந்த நிலை ஏற்படாதவாறு, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்களை முழுமையாக நியமித்து, மாணவர்களுக்கு கல்வி போதிக்வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். அதேவேளையில், மாணவர்கள் நவீன காலத்திற்கேற்ற கல்வித் திறனை வளர்த்துக்கொள்ள, போதிக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான திறனை மேம்படுத்துக் கொள்வதும் மிக அவசியம். 
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் அரசுப் பள்ளிகளை அதிகம் கொண்டிருக்கும் பிராந்தியங்களாக புதுச்சேரி, காரைக்கால் உள்ளது. எனவே, இவ்விரு பிராந்தியங்களில் நிலவும் காலிப் பணியிடங்களால் மாணவர்கள் படும் அவதி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தாங்கள் உள்ளதால், பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாத கவலை ஒருபுறம், காலாண்டுத் தேர்வை எதிர்கொள்ள திறனை வளர்த்துக்கொள்ள முடியாத கவலை ஒருபுறம் என மாணவர்களால் கோரிக்கையை வலியுறுத்தி போராட முன்வரமுடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
காரைக்கால் பிராந்தியத்தில் மட்டும் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடப் பிரிவுகளில் 20 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதே காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகள், உரிய பாடங்களை முறையாக போதித்து முடித்துவிட்டன. அரசுப் பள்ளிகள் விடுமுறை முடிந்து தொடங்கியது முதல்  தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெறவுள்ள நிலை வரை, மாணவர்கள் குறிப்பிட்ட பாடப் பிரிவை படிக்க முடியாமலேயே தேர்வை எதிர்கொள்ள தயாராகிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
 காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலவும் காலிப் பணியிடங்களால், மாணவர்கள் திங்கள்கிழமை வாயிலுக்கு வந்து போராட்ட முயன்றனர். கல்வித் துறையினரின் தலையீட்டால் போராட்டமின்றி மாணவர்கள் வகுப்பறையில் தங்கிவிட்டனர். இதே நிலை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிலவுவதாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்படுகிறது.
செயலற்ற பெற்றோர் சங்கம் : மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், முதல்வர், கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர் ஆகியோரிடம் பேசி, விரைவாக தீர்வுக்கான எந்தவொரு செயலிலும் மாவட்ட அளவில் உள்ள பெற்றோர் சங்கங்கள் முன்வரவில்லை. முதல்வரும், அமைச்சரும் காரைக்கால் வந்தால் அவர்களுடன் பவனி வரும் நிர்வாகிகளாகவே உள்ளதாகவும், சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் அமைப்புகளாகவே இவை செயல்படுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர். காலிப் பணியிடங்கள் நீடித்தால் நிகழ் கல்வியாண்டில் காரைக்காலில் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கின்றனர் கல்வியாளர்கள். இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: மேல்நிலைப் பள்ளிகளில் ஏறக்குறைய 20 விரிவுரையாளர்கள் காலியாக உள்ளது உண்மைதான். மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள திணறுகிறார்கள் என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். தற்காலிக நிலையிலான பதவிகளை நிரந்தரம் செய்யவேண்டியுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்த பின்னரே பதவி உயர்வு மூலம் காலிப் பணியிடங்களை நிரப்புவார்கள். 
தற்போது முதல் நிலையிலான பணிகள்தான் நடந்துவருகிறது. அதே வேளையில், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் கல்வித் துறை எடுத்துள்ளது. அடுத்த சில நாள்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்டோபர் முதல் வாரத்திலிருந்து ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்க வாய்ப்புண்டு என்றனர். 
எனவே, புதுச்சேரி அரசு இதுகுறித்து போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com