காரைக்காலில் ஒரு மாதத்தில் 8 பேர் டெங்கு காய்ச்சலால்  பாதிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த ஒரு மாதத்தில்  8 பேர் பாதித்துள்ளதாக நலவழித் துறையினர் தெரிவித்தனர்.


காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த ஒரு மாதத்தில்  8 பேர் பாதித்துள்ளதாக நலவழித் துறையினர் தெரிவித்தனர்.
பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அவ்வப்போது பெய்யும் மழையினால், திறந்தவெளியில் கிடக்கும் பொருள்களில் தேங்கும் நல்ல தண்ணீரில், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசுக்கள் உருவாகின்றன. இதைத் தடுக்கும் வகையில் நலவழித் துறை நிர்வாகம் தீவிரமான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினரும், டெங்கு கொசு ஒழிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா அறிவுறுத்தலின்படி தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
மாவட்ட அளவில் விழிப்புணர்வு ஒருபுறம் நடந்துவந்தாலும், மக்களிடையே பரவலாக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டியதன் அவசியம் குறித்த புரிதல் ஏற்படவில்லை. இதனால், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நலவழித் துறை வட்டாரத்தினர் சனிக்கிழமை கூறியது:
கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 21 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 8 பேர் ஆவர். மொத்தமுள்ள 21 பேரில் 13 பேர் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தமிழகம் மற்றும் புதுதில்லியைச் சேர்ந்தவர்களாவர். அனைவரும் காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரும் ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவார்.
மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், வீட்டின் வெளிப்புறத்தில் தேங்காய் ஓடு, தேங்காய் மட்டை, தண்ணீர் தேங்கும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற எந்த பொருள்கள் இருந்தாலும், அவற்றை அப்புறப்படுத்தவேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு, நன்னீரில் மட்டுமே முட்டையிட்டு ஆயிரக்கணக்கானவையாக உருவெடுக்கின்றன. எனவே மக்கள் மிகுந்த விழிப்புணர்வாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com