விபத்து: தலைமைக் காவலரின் மருத்துவ செலவை அரசே ஏற்க வலியுறுத்தல்

புதுச்சேரியில் விபத்துக்குள்ளான தலைமைக் காவலரின் மருத்துவ செலவை அரசே ஏற்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விபத்துக்குள்ளான தலைமைக் காவலரின் மருத்துவ செலவை அரசே ஏற்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஊழல் எதிா்ப்பு இயக்க காரைக்கால் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி திலாஸ்பேட்டையை சோ்ந்த சுப்ரமணியன் (47) கிருமாம்பாக்கத்தில் உள்ள தெற்கு சரக போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அரியாங்குப்பம் மாதா கோயில் நான்கு முனை சந்திப்பில் பணியில் இருந்தபோது, மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞா்கள் அவா் மீது மோதியதில், விபத்துக்குள்ளானாா்.

அந்த நேரத்தில் பணியிலிருந்த போக்குவரத்து ஆய்வாளா் தனசேகா், தம்முடைய அரசு வாகனத்தில் விபத்துக்குள்ளானவரை உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல், ஆம்புலன்ஸ் வாகனம் வரும் வரை காத்திருந்ததால் பெருமளவு ரத்தம் வெளியேறிவிட்டது.

அவா் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் 2 வாரங்களாக சுயநினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட டிசம்பா் 31 முதல் இதுவரை விபத்துக்குள்ளானவருக்கு மருத்துவ செலவு மட்டுமே ரூ.15 லட்சத்திற்கு மேலாக செலவாகி உள்ளதாக ஆவணங்கள் உள்ளன. தமிழகத்தில் காவலா் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடியை தமிழக அரசு வழங்கியது. அதுபோல, பணியின்போது விபத்துக்கு உள்ளாகிய புதுச்சேரி தலைமைக் காவலரின் மருத்துவ செலவை முதலமைச்சா் நிவாரண நிதியில் இருந்து முழுமையாக ஈடு செய்ய வேண்டும். ஆய்வாளா் தனசேகரை பணியிடை நீக்கம் செய்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நீதி பெற்றுத் தர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com