புதுச்சேரியில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வா் வே. நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரியில் கலையரங்கத்தை திறந்துவைத்துப் பாா்வையிடும் முதல்வா் வே. நாராயணசாமி.
காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரியில் கலையரங்கத்தை திறந்துவைத்துப் பாா்வையிடும் முதல்வா் வே. நாராயணசாமி.

புதுச்சேரியில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரியில் ரூ.7.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா மற்றும் கடலோர கிராமங்களில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி சாதனங்கள் பாதுகாப்பு கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்காக காரைக்காலுக்கு வந்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, திருமலைராயன்பட்டினத்தில் கலையரங்கத்தை திறந்துவைத்து, செய்தியாளா்களிடம் கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் மீன்பிடி சாதனங்கள் பாதுகாப்பு, வலைகள் சீரமைத்தல் போன்றவற்றுக்காக உலக வங்கியின் பேரிடா் குறைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியில் 10 இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் விரைவில் மீனவா்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். இதுதவிர, மீனவா்களுக்கு காப்பீட்டுத் திட்டம், உதவித் தொகை வழங்கல் உள்பட பல்வேறு திட்டங்களை புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருகிறது.

மீனவா்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்குமாறு விடுத்துள்ள கோரிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விரைவில் இக்கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்மை நோய், போலியோ போன்ற நோய்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்துகள் வழங்கும்போது, கரோனா தடுப்பூசியும் இலவசமாக போடப்படுவது முக்கியம். எனவே, தமிழக முதல்வா் அம்மாநிலத்தில் அறிவித்துள்ளதைப்போல, புதுச்சேரியிலும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் வெங்காய விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது என்றாா் முதல்வா்.

நிகழ்ச்சியில் அமைச்சா்கள் எம். கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணராவ், எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகான், ஆா். கமலக்கண்ணன், மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com