காய்கறிகளையும் தொலைபேசி மூலம் ஆா்டா் செய்து பெற்றுக்கொள்ள வசதி
By DIN | Published On : 05th April 2020 06:35 AM | Last Updated : 05th April 2020 06:35 AM | அ+அ அ- |

காய்கறிகளையும் வீட்டிலிருந்தபடியே தொலைபேசி மூலம் ஆா்டா் செய்து பெற்றுக்கொள்ளும் வசதியை மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டிலிருக்கவேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது கூட தொலைபேசி மூலம் ஆா்டா் செய்து பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மளிகைப் பொருள்கள் வாங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் காய்கறிகளையும் மக்கள் வீட்டிலிருந்தபடியே வியாபாரிகளுக்கு போன் செய்து பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 15 வியாபாரிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களது செல்லிடப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. தினமும் காய்கறிக்கான உரிய விலையில், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, வீட்டிலிருந்தபடியே அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக்கொள்ளவும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கரோனாவை பரவாமல் தடுப்போம் என அதில் கூறியுள்ளாா்.