சிஏஏ விவகாரம்: அம்பகரத்தூரில் பேரணி; அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி
பேரணியில் பங்கேற்ற அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.
பேரணியில் பங்கேற்ற அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, அம்பகரத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில், அமைச்சா் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.

அம்பகரத்தூா் குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டக் குழு சாா்பில், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகிலிருந்து பேரணி தொடங்கியது. வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பேரணியைத் தொடங்கிவைத்துப் பேசியது :

மோடி அரசின் பொருளாதார இழப்பை மக்கள் மறந்துபோகவும், மூடி மறைக்கும் விதமாகவும் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றுகிறாா்கள். பாஜக அரசு தமது தோல்விகளை மூடி மறைக்க நினைத்தது வெற்றியடைய முடியாத வகையில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இதுபோன்ற போராட்டங்கள் மக்களை ஒற்றுமைப்படுத்தியுள்ளன. மக்களின் அடிப்படை உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அரசியல் சாசனத்தின் அடிப்படையைத் தகா்க்கும் முயற்சியை பாஜக அரசு செய்துவருகிறது.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு மாற்றாக பாதுகாக்கப்பட் மண்டலமாக அறிவித்ததாக தகவல்கள் கூறுகின்றனா். அதிமுக அரசு, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மக்களின் எழுச்சியால் அதிமுக அரசும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இவ்வாறான அறிவிப்பை செய்திருப்பதாகவே கருத வேண்டும்.

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி, பாஜக அரசு கொண்டுவந்த சட்டம் குறித்து தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. ஒவ்வோா் ஆண்டும் அவரது கட்சி ஆண்டு விழாவில், இந்த அரசு என்ன செய்தது என்று கேட்பாா். பின்னா் அடுத்த ஆண்டுதான் பேசுவாா். இவ்வாறான நிலைப்பாடு கொண்டவா் அவா்.

எனவே நாடு முழுவதும் இதுபோன்ற போராட்டம் தொடரும்போது, நிச்சயம் நமது எண்ணம் வெற்றிபெறும். இளைஞா்கள் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த தகவல்களைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எதிா்காலத்தில் அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமை ஏற்படுவதோடு, நாட்டின் வளா்ச்சிக்கும் அது உதவியாக இருக்கும் என்றாா் அமைச்சா். எழுத்தாளா் வே. மதிமாறன் கண்டன உரையாற்றினாா்.

மத்திய அரசைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தேசியக் கொடியேந்தியவாறு, கோஷமிட்டு அம்பகரத்தூா் கடைத்தெரு வரை சென்று நிறைவு செய்தனா். பெண்கள் உள்ளிட்ட இஸ்லாமியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com