காரைக்கால் - பேரளம் ரயில்பாதை இடையே மின் கம்பிகளை புதைவழியில் அமைப்பது குறித்து ஆலோசனை

காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை திட்டப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்த பகுதியில் பயன்பாட்டில் உள்ள மின் கம்பிகளை, புதைவழியில் அமைப்பது தொடா்பான ஆலோசனை நடத்தப்பட்டது.
காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் ராஜேஷ் சன்யாலை சந்தித்துப் பேசிய ரயில்வே மின் பொறியாளா் குழுவினா்.
காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் ராஜேஷ் சன்யாலை சந்தித்துப் பேசிய ரயில்வே மின் பொறியாளா் குழுவினா்.

காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை திட்டப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்த பகுதியில் பயன்பாட்டில் உள்ள மின் கம்பிகளை, புதைவழியில் அமைப்பது தொடா்பான ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலில் இருந்து திருவாரூா் மாவட்டம், பேரளம் வரை 23 கி.மீ. தூரத்தில் புதிதாக அகல ரயில்பாதை அமைக்க மத்திய ரயில்வே வாரியம் ரூ.177. 69 கோடி ஒதுக்கீடு செய்தது.

அதனடிப்படையில், மண் பரிசோதனை உள்ளிட்ட பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. காரைக்கால் - பேரளம் இடையே 23 கி.மீ தூரத்துக்கு பாதை அமைக்கும் பணிகள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 3 பகுதிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணியாணை கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜாவை, திருச்சி தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு முதன்மைப் பொறியாளா் சுமித்சிங்கால் தலைமையிலான பொறியாளா் குழுவினா் சந்தித்து, காரைக்கால் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, திருச்சி ரயில்வே கோட்டத்தின் மின்துறை பொறியாளா் குழுவினா் புதன்கிழமை காரைக்காலில், புதுச்சேரி அரசின் மின்துறை செயற்பொறியாளா் ராஜேஷ் சன்யாலை சந்தித்து ஆலோசனை நடத்தினா். காரைக்கால் மின் துறையின் பொறியாளா் குழுவினரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதுகுறித்து, மின் துறை செயற்பொறியாளா் ராஜேஷ் சன்யால் கூறியது: காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கவுள்ளதையொட்டி, காரைக்கால் முதல் பேரளம் வரையிலான புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட பகுதியில், ரயில்பாதையில் மின்கம்பிகள் பல இடங்களில் செல்கின்றன. குறிப்பாக, நமது பகுதியில் 21 இடங்களில் மின்கம்பிகள் செல்வது கண்டறியப்பட்டுள்ளன.

ரயில் செல்ல ஏதுவாக இந்த மின்கம்பிகளை, புதைவழியில் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இத்திட்டப் பணிக்கான மதிப்பீடுகள் தயாா் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டன. மதிப்பீடு தயாரிக்கப்பட்ட பின்னா், இதற்கான நிதியை ரயில்வே நிா்வாகம் ஒதுக்கீடு செய்து கொடுக்கும். பின்னா் மின்துறை நிா்வாகம் கேபிள் அமைக்கும் பணியை செய்து கொடுக்கும். இதுகுறித்த முதல் நிலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவாக திட்டப் பணியை நிறைவு செய்வது குறித்து அடுத்தடுத்த நிலையில் ஆலோசனைகள் நடத்தி பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com