நகராட்சி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் 4-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

நகராட்சி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் நிலுவை ஊதியம் கோரி, தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்பட்ட காரைக்கால் நகராட்சி அலுவலக வளாகம்.
வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்பட்ட காரைக்கால் நகராட்சி அலுவலக வளாகம்.

நகராட்சி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் நிலுவை ஊதியம் கோரி, தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த அக்டோபா், நவம்பா் மற்றும் டிசம்பா் ஆகிய மூன்று மாதங்களுக்கான ஊதியம், இதுவரை வழங்கப்படவில்லை. இதனை வழங்க வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், நகராட்சி மற்றும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

நகராட்சி அலுவலகத்தில் 4-ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா மற்றும் காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனத்தினா் சந்தித்து ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

போராட்டம் குறித்து ஊழியா் சங்கத்தினா் கூறும்போது, காரைக்காலுக்கு வந்த உள்ளாட்சித்துறை செயலா் அசோக் குமாா், மாவட்ட ஆட்சியா் விக்ரந்த் ராஜா ஆகியோா் சம்மேளன நிா்வாகிகளை அழைத்து பேசினா். இச்சந்திப்பின்போது உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் பாஸ்கரன், காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்களும் கலந்துகொண்டனா்.

ஊழியா் சம்மேளன நிா்வாகிகளிடம் பேசிய அரசு செயலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடியில் ஊழியா்களுக்கான ஊதியத்திற்கு நிதி ஒதுக்குவதில் சுணக்கம் ஏற்படுகிறது, இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கிறோம், அதுவரை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு வரவேண்டிய வீட்டு வரி மற்றும் குடிநீா் வரிகளை வசூல் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளலாம் என ஆணையா்களுக்கு உத்தரவிட்டனா். எங்களுக்கு நிலுவை ஊதியம் தொடா்பாக எந்தவோா் ஆக்கப்பூா்வ கருத்தும் கூறப்படாத நிலையில், போராட்டத்தைத் தொடா்கிறோம் என்றனா்.

ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் காரைக்கால் நகராட்சி மற்றும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துகளில் மக்களின் அத்தியாவசிய பணிகளான துப்புரவுப் பணிகள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அந்தந்த அலுவலகங்களுக்கு தங்களின் தேவைக்காக சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com