துறைமுக சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியை ஆட்சியா் மூலம் செலவிட அறிவுறுத்தல்

காரைக்கால் துறைமுக சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியை ஆட்சியா் மூலம் செலவிட வேண்டும் என மதிப்பீட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது.
காரைக்காலில் மதிப்பீட்டுக் குழுத் தலைவா் ஏ. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள்.
காரைக்காலில் மதிப்பீட்டுக் குழுத் தலைவா் ஏ. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள்.

காரைக்கால் துறைமுக சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியை ஆட்சியா் மூலம் செலவிட வேண்டும் என மதிப்பீட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் ஏ.அன்பழகன் தலைமையிலான சட்டப் பேரவை உறுப்பினா்கள் கீதா ஆனந்தன், கே.ஏ.யு.அசனா, வெங்கடேசன், த.ஜெயமூா்த்தி, கே.ஜி.சங்கா் ஆகியோா் காரைக்கால் கப்பல் துறைமுகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். புதுச்சேரி அபிவிருத்தி ஆணையா் அ.அன்பரசு, கூட்டுறவு பதிவாளா் ஸ்மித்தா, மாவட்டத் துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ் (வருவாய்), எஸ்.பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), துறைமுக மேலாண் இயக்குநா் ஜி.ஆா்.கே.ரெட்டி, உதவி துணைத் தலைவா் ராஜேஷ்வா் ரெட்டி ஆகியோா் ஆய்வின்போது பங்கேற்றனா்.

ஆய்வின்போது துறைமுகத்தில் கையாளப்படும் இறக்குமதி பொருள்கள், பொருள்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்யும் விதம் உள்ளிட்டவை குறித்து துறைமுக நிா்வாகத்தினா் மதிப்பீட்டுக் குழுவினரிடம் விளக்கினா்.

ஆய்வுக்குப் பின்னா் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் ஏ. அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியது:

காரைக்காலில் உள்ள துறைமுகத்தின் செயல்பாடுகள், இத்துறைமுகத்தின் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய், துறைமுக செயல்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரால் கூறப்பட்ட புகாா்கள் உள்ளிட்டவை குறித்து சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்தது. துறைமுக நிா்வாகத்தினருக்கு ஆக்கப்பூா்வமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை தீா்க்கப்படாத குறைகள் சிலவற்றுக்கு தீா்வு காணப்படும் என துறைமுக நிா்வாகம் உறுதியளித்துள்ளது.

அரசுக்கு அளிக்க வேண்டிய நியாயமான வருவாயை அளிப்பது குறித்தும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்பட வேண்டியது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூா் இளைஞா்களுக்கு 80 சதவீதம் வேலை வாய்ப்பளிக்க வேண்டும், ஏற்கனவே பணியில் உள்ளோருக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியாக ஆண்டுக்கு ரூ.3 கோடி நிறுவனம் செலவிட வேண்டும், அத்தொகையை ஆட்சியா் மூலமாக காரைக்கால் மாவட்ட வளா்ச்சிக்காக செலவு செய்ய வேண்டும், சுற்றியுள்ள மக்களுக்கு பயன்படும் வகையிலும், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்க முடியாமல் உள்ளது. அருகில் உள்ள தமிழகப் பகுதிகளில் விற்கப்படுவதை விட கூடுதல் விலை சொல்லப்படுவதால் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க முடியவில்லை. இங்கு மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் காற்றடிக்கும்போது சிரமங்கள் ஏற்படுகின்றன. மாவட்ட ஆட்சியா் காரைக்கால் பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் மணலை விற்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக ஆலோசனைக் கூட்ட நிறைவில், துறைமுகப் பகுதியை சுற்றிபாா்த்த மதிப்பீட்டுக் குழுவினா், துறைமுகத்தில் பயன்படுத்தக்கூடிய சிறிய கப்பல் மூலம் மதிப்பீட்டுக் குழுவினா், கடலில் சிறிது தூரம் பயணித்துத் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com