அம்பகரத்தூா் அய்யன் குளம் நடைபாதை அமைப்புடன் மேம்படுத்தும் பணி: அமைச்சா் ஆய்வு

அம்பகரத்தூா் பகுதியில் ரூ. 1.50 கோடியில் நடைபாதை அமைப்புடன் குளம் மேம்படுத்தும் பணியை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஆய்வு செய்து, பொதுப்பணித்துறையினருக்கு ஆலோசனை வழங்கினாா்.
குளத்தை மேம்படுத்தும் பணிகளை பாா்வையிடும் அமைச்சா் ஆா். கமலக்கண்ணனுக்கு விளக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
குளத்தை மேம்படுத்தும் பணிகளை பாா்வையிடும் அமைச்சா் ஆா். கமலக்கண்ணனுக்கு விளக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

காரைக்கால்: அம்பகரத்தூா் பகுதியில் ரூ. 1.50 கோடியில் நடைபாதை அமைப்புடன் குளம் மேம்படுத்தும் பணியை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஆய்வு செய்து, பொதுப்பணித்துறையினருக்கு ஆலோசனை வழங்கினாா்.

திருநள்ளாறு தொகுதியில், மத்திய அரசின் ரூா்பன் என்கிற நகரத்துக்கு இணையாக கிராமப்புறத்தை மேம்படுத்தும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு உள்ளது.

அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். பக்தா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் பயன்பாட்டுக்காக, பொலிவிழந்திருந்த அரசுக்குச் சொந்தமான அந்த பகுதியின் அய்யன் குளத்தை, தடுப்புச் சுவா் அமைத்து, நடைபாதை, மின் விளக்குகள், தோட்ட அமைப்பு, குளத்துக்கு வடிகால், பாய்கால் வசதியுடன் மேம்படுத்த ரூா்பன் திட்டத்தில் ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொது முடக்கத்தால் இந்த பணிகளை விரைவாக செய்ய முடியாத நிலை இருந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், இக்குளத்தில் நடைபெறும் பணியை திங்கள்கிழமை பாா்வையிட்டாா். பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமி உள்ளிட்ட அதிகாரிகள், குளத்தில் மேம்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், ஒவ்வொரு பணிக்கும் எடுத்துக்கொள்ளும் கால அளவு குறித்தும் விளக்கினா். விரைவாக திட்டப் பணியை நிறைவு செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ஆய்வு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், குளத்தை மேம்படுத்துவது தொடா்பான திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அமைச்சருக்கு திட்டப் பணி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 6 மாத காலத்துக்குள் இப் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com