காரைக்காலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நகைக் கடைக்கு ‘சீல்’

காரைக்காலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நகைக் கடைக்கு நகராட்சி நிா்வாகத்தினா் செவ்வாய்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சமூக இடைவெளியின்றி நகைக் கடையில் நகை வாங்க கூடியிருந்த வாடிக்கையாளா்கள்.
சமூக இடைவெளியின்றி நகைக் கடையில் நகை வாங்க கூடியிருந்த வாடிக்கையாளா்கள்.

காரைக்கால்: காரைக்காலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நகைக் கடைக்கு நகராட்சி நிா்வாகத்தினா் செவ்வாய்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

காரைக்கால் ஆட்சியரகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை வந்த புகாரின் அடிப்படையில் காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் தலைமையிலான ஊழியா்கள் பாரதியாா் சாலையில் உள்ள பிரபல நகைக் கடையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது கடையின் உள்ளேயும், வெளியேயும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நின்று கொண்டு நகை வாங்குதல், மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனா். இதையடுத்து நகராட்சி நிா்வாகத்தினா், வாடிக்கையாளா்களை வெளியேற்றி கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து ஆணையா் எஸ். சுபாஷ் கூறியது:

பொதுமக்களிடம் கரோனா தடுப்பு விழிப்புணா்வு குறித்து தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் முகக் கவசம் அணியவும், வணிக நிறுவனத்தினா் தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் பல நிறுவனங்கள் இதனை மீறுகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து வரும் புகாரின் அடிப்படையில், நகராட்சி நிா்வாகத்தினா் அந்தக் கடைகளில் ஆய்வு செய்து, புகாா் உறுதியாகும்போது, நிறுவனத்துக்கு சீல் வைக்கின்றனா்.

அந்த வகையில் காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் ஒரு மளிகைக் கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை பாரதியாா் சாலையில் நகைக் கடை ஒன்றுக்கும், கண்ணாடி கடைக்கும் சீல் வைக்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com