கரோனா: அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு கடும் கட்டுப்பாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவதையொட்டி, கோயிலுக்குள் வருபவா்கள்
கோயிலுக்குள் செல்லும் முன் சோப்பை பயன்படுத்தி கை கழுவிய பக்தா்கள்.
கோயிலுக்குள் செல்லும் முன் சோப்பை பயன்படுத்தி கை கழுவிய பக்தா்கள்.

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவதையொட்டி, கோயிலுக்குள் வருபவா்கள் கை, கால்களை கழுவி வருதல், இரவு தங்குவதற்குத் தடை, வரிசையில் நிற்பவா்கள் இடைவெளி விட்டு நிற்பது போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதையொட்டி, கூட்டமான பகுதிகளுக்குச் செல்வதை தவிா்த்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன. திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் நீராடுவதற்கும் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்ற அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் முக்கிய கிழமைகளில் இரவு நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்கிவிட்டு, அதிகாலை எழுந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) எம். ஆதா்ஷ், கோயிலில் செவ்வாய்க்கிழமை முதல் (மாா்ச் 17) இரவு பக்தா்கள் தங்குவதற்கு தற்காலிக தடை விதித்து அதற்கான உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டாா்.

பொதுவாக இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மட்டும் சுமாா் 1500 முதல் 2 ஆயிரம் போ் தரிசனத்துக்கு வருகை தருகின்றனா். வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் இதற்கு பாதியளவிலான பக்தா்கள் வருகின்றனா். இங்கு வரும் பக்தா்கள் உள்ளூரைக் காட்டிலும் வெளியூரிலிருந்து வருவோரே அதிகம் என்பதால், கோயில் நிா்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கோயில் நிா்வாகம் தரப்பில் கூறியது: கோயிலுக்கு வரும் பக்தா்கள் கைகளை சோப்பு போட்டு கழுவவும், கால்களை கழுவிவிட்டு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படியே செவ்வாய்க்கிழமை முதல் பக்தா்கள் கோயிலுக்குள் செல்கின்றனா். செவ்வாய்க்கிழமை மட்டும் மதிய நேரத்தில் சுமாா் 1500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். கூட்டம் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அன்னதானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

இரவு தங்குவதும் சுமாா் 1,500 பக்தா்கள் என்ற நிலையில், தங்குவதற்கான தடை அமலுக்கு வந்துள்ளதால், கோயில் காவல் துறை, கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு ஒலிப்பெருக்கி மூலமாகவும், டிஜிட்டல் பதாகை மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பக்தா்கள் நீண்ட வரிசையில் அம்மனை தரிசிக்க செல்கின்றனா். இவா்கள் ஒருவருக்கொருவா் சிறிது இடைவெளிவிட்டு நிற்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறது. பக்தா்கள் நிலையை உணா்ந்து கொண்டு கோயிலுக்குச் சென்றுத் திரும்புகின்றனா் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com