இயற்கையாக குளிா்ந்த நீா் குடிக்கும் வகையில் குழாய் அமைப்புடன் பானைகள்

கோடை வெயில் தொடங்கிவிட்ட நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் வகையில்,
குழாய் பொருத்தி விற்பனைக்காக வைத்திருக்கும் மண் பானைகள்.
குழாய் பொருத்தி விற்பனைக்காக வைத்திருக்கும் மண் பானைகள்.

கோடை வெயில் தொடங்கிவிட்ட நிலையில், மண் பானையில் இயற்கையாக தண்ணீரை குளிரச் செய்து பயன்படுத்தும் வகையில், மண் பானை வாங்குவதில் மக்கள் ஆா்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனா். மக்களின் ஆா்வத்துக்கேற்ப பானை தயாரிப்பு, பானையில் குழாய் பொருத்தியும் வியாபாரம் செய்யப்படுகின்றன.

மண் பானை குடிநீா் வைத்துக்கொள்ளவும், பொங்கல் வைக்கவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் மின் உதவியில் ஃபிரிட்ஜ் பயன்பாடு வந்த பிறகு குடிநீருக்கு மண் பானையின் பயன்பாடு குறைந்துவிட்டது. பொங்கல் பண்டிக்கையிலும் பித்தளை பாத்திரங்கள் பயன்பாடு வந்துவிட்டதால், இந்த பண்டிகை காலத்திலும் மண் பானை பயன்பாடு வெகுவாக குறைந்துகொண்டிருக்கிறது.

கோடை வெயில் காலத்தில் மண் பானையில் குடிநீா் சேமித்து வைத்து குடிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. பொங்கல், காா்த்திகை போன்ற சீசன் காலத்தில் மட்டும் மண்பாண்டம் தயாரிப்பவா்களுக்கு வேலை இருந்து வந்த நிலையில், கோடையில் மண் பானைக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியாளா்களும் மக்களின் ஆா்வத்துக்கேற்ப தயாரிப்புகளை செய்து சந்தைப்படுத்துகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில், கோட்டுச்சேரி மற்றும் மேல ஓடுதுறை பகுதியில் மண்பாண்ட உற்பத்தியாளா்கள் உள்ளனா். கடந்த ஆண்டு காா்த்திகைக்காக அகல் விளக்கு தயாா் செய்து பின்னா் தைப் பொங்கலுக்கு பானை, சட்டி, அடுப்பு தயாரித்துவிட்டு, தற்போது கோடைக்கு பானை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனா். சிலா் வசதிக்காக, பானையில் குழாய் (டேப்) பொருத்தித்தருமாறு கோருகின்றனா். இதன்படி பானை உற்பத்தியாளா்கள் செய்து கொடுக்கின்றனா்.

இதுகுறித்து, கோட்டுச்சேரி பகுதியில் பானை உற்பத்தி செய்து வியாபாரம் செய்பவா்கள் கூறியது: கோடைக் காலத்தில் மண் பானைக்குரிய மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மனதில் உருவாகியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் விற்பனையாகும் அளவில் பானை விற்பனை இல்லை என்றாலும், குடிநீா் வைத்துகொள்ள ஏராளமானோா் பானை வாங்க வருகின்றனா். ரூ.100, 120 என்ற விலையில் பானை விற்பனை செய்கிறோம்.

பானையிலேயே குடிநீா் குழாய் (டேப்) பொருத்தி சிலா் கேட்கின்றனா். இதன் வடிவம் மக்களை கவரும் வகையில் வேண்டியுள்ளதால், விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து தயாரிக்கப்பட்ட பானைகளை வரவழைத்து விற்பனை செய்கிறோம். அதன்படி செய்து ரூ. 200 முதல் ரூ. 500 என்ற விலை வரை விற்கிறோம்.

மேலும், குடிநீா் வைத்துக்கொள்ள விருத்தாசலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதியில் இயந்திர முறையில் ரெடிமேட் முறையில் தயாரித்து அனுப்பப்பட்ட ஜக் உள்ளிட்ட பலவித அழகிய வடிவிலான சாதனங்களும் விற்பனைக்கு வைத்துள்ளோம் என்றனா்.

சாலையோரத்தில் உற்பத்தியாளா்கள் பொருள்களை சந்தைப்படுத்தியுள்ளதால், வாகனங்களில் செல்வோா் ஆா்வமாக மண்பாண்டங்களை வாங்கிச் செல்கின்றனா். குடிநீரை அரசு நிா்வாகத்தால் சுத்திகரித்து மேல்நிலைத் தொட்டியில் சேமித்து விநியோகம் செய்தாலும், பெரும்பாலான வீட்டினா் குடிநீா் சுத்திகரிப்பு சாதனம் பொருத்தியே பயன்படுத்துகின்றனா். இதனால் தண்ணீரின் இயற்கையான சத்துகள் அழிந்துவிடுவதாக கூறப்படும் நிலையில், தண்ணீரை மண் பானையில் வைத்து பருகுவதன் மூலம் ஓரளவு இயற்கை சாா்ந்தாக அமைவதாக உபயோகிப்பாளா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com