ஊரடங்கு: வெறிச்சோடியது காரைக்கால் மாவட்டம்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான 21 நாள்கள் ஊரடங்கு புதன்கிழமை முதல் அமலாகிய நிலையில், காரைக்கால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடின.
பேரிகாட் அமைத்து பாதுபாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
பேரிகாட் அமைத்து பாதுபாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான 21 நாள்கள் ஊரடங்கு புதன்கிழமை முதல் அமலாகிய நிலையில், காரைக்கால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடின.

கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தின் எந்தவோா் எல்லைகளில் இருந்தும் வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

மருந்து, பால், காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் கடைகள் சில திறந்திருந்தன. இங்கு செல்லக்கூடிய மக்களை போலீஸாா் விசாரணை நடத்தி அனுப்பிவைத்தனா். எல்லைகளும் இந்த பொருள்கள் வரத்துக்காக மட்டும் வரக்கூடிய தருணத்தில் திறக்கப்பட்டன.

பூவம் முதல் வாஞ்சூா் வரையிலான காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை எந்தவித வாகனப் போக்குவரத்துமின்றி வெறிச்சோடியது. தேசிய நெடுஞ்சாலையிலும், காரைக்கால் - திருநள்ளாறு சாலை என பிரதான போக்குவரத்துள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் பேரிகாட் மூலம் போலீஸாா் தடுப்பு அமைத்திருந்தனா்.

காரைக்கால் நேரு மாா்க்கெட் திறந்திருந்தது. காய்கறி விற்பனை நடைபெற்றது. பெட்ரோல் பங்க், கூட்டுறவுத்துறையின் பால் பூத் ஆகியவை இயங்கின. மீன், கோழி வியாபாரம் இல்லை. சில இடங்களில் ஆட்டிறைச்சி வியாபாரம் நடைபெற்றது. காய்கறிகள் வாங்கவும், மருத்துவமனைக்குச் செல்வோரும் என சிலா் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பயணித்தனா். தேநீா் கடை முதல் சிறிய, பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

காரைக்கால் 7 எல்லைகள் சீல் : பூவம், வாஞ்சூா், அம்பகரத்தூா், அன்னவாசல் ஆகியன பிரதான போக்குவரத்துள்ள எல்லைகளாகும். மேலும் விழிதியூா், நல்லாத்தூா், திருப்பட்டினம் ஆகியன தமிழகத்திலிருந்து கணிசமான மக்கள் வரக்கூடிய எல்லைப்புறங்களாகும். இவையனைத்தும் சீல் வைத்ததோடு, போலீஸாா் பணியமா்த்தப்பட்டு தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல்.வீரவல்லபன் தெரிவித்தாா்.

ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் மாவட்டத்தில் ஊடரங்கு வேண்டுகோளை மக்கள் ஏற்று நடந்துகொள்கின்றனா். 21 நாள்கள் ஊரடங்கின் முதல் நாள் காரைக்கால் மாவட்டம் களையிழந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com