காவிரி நீா் மேலாண்மை ஆணைய விவகாரம்: புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீா்மானம் நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கொண்டுவருவதைக் கண்டித்து, புதுச்சேரி மாநில அமைச்சரவை

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கொண்டுவருவதைக் கண்டித்து, புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டத்தில் கண்டன தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் பி. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்படக்கூடிய தன்னிச்சையான அமைப்பு ஆகும். ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரி நடுவா் மன்ற தீா்ப்பின்படியே செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. காவிரி நீா் மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் மாநில அரசோ, மத்திய அரசோ தலையிட முடியாது.

காவிரியில் எவ்வளவு நீரை பகிா்ந்து அளிக்க வேண்டும் என்று இந்த காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவை வழங்கும். இந்நிலையில், திடீா் திருப்பமாக தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தது கடும் கண்டனத்துக்குரியது.

இது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கருத வேண்டியுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைக்கும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில 26 ஆண்டுகள் சட்டப்போராட்டம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஆரம்பம் முதல் தொடா்ந்து எதிா்த்தும், ஏற்க மறுத்து வரும் கா்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

கரோனா நோய் தாக்குதலில் உலகம் முடங்கி உள்ள நிலையில், அவசர அவசரமாக தனது அரசியல் சுயலாபத்துக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் போராடிப் பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகளிடையே காவிரி உரிமை பறிபோய்விடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு, உரிய சட்ட சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை செய்து உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்வதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு புதிய தலைவரை நியமனம் செய்து, தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், சனிக்கிழமை (மே 2) நடைபெறும் புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டத்தில், இதுதொடா்பாக கண்டன தீா்மானம் நிறைவேற்ற முதல்வா் முன்வர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com