மீலாது நபி நாளில் மூடப்படாத மதுக்கடைகள்: முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்
By DIN | Published On : 01st November 2020 08:03 AM | Last Updated : 01st November 2020 08:03 AM | அ+அ அ- |

மீலாது நபி தினத்தன்று மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற அரசாணையை அரசு செயல்படுத்தாதற்கு முஸ்லிம் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஏ.கே. முகம்மது யாசின் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முஹம்மது நபியின் பிறந்த தினமான மீலாது நபி நாளில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடவேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய அமைப்புகளால் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடா்பாக சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றி, மீலாது நபி தினத்தன்று மதுக்கடைகளை மூட அப்போதைய காங்கிரஸ் அரசு அரசாணை பிறப்பித்தது.
கடந்த 30-ஆம் தேதி மீலாது நபி தினத்தில் அரசாணை மீறப்பட்டு, புதுச்சேரி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் திறந்திருந்தன. இதுகுறித்து சமுதாய அமைப்புகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, போராட்டம் நடத்திய பிறகு பகல் 12 மணியளவில் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதுவும் மாலை 6 மணி வரை மூடவேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இந்த உத்தரவு கண்துடைப்பாக வெளியிடப்பட்டதாகவே தெரிகிறது. இதை முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், வக்ஃபு வாரியம் மற்றும் ஹஜ் கமிட்டியை அமைக்காமல் காலந்தாழ்த்தி வருகிறது. எனவே, அலட்சியமாக செயல்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும்.