திருநள்ளாற்றில் ஆன்மிக பூங்கா டிசம்பா் முதல் வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்

திருநள்ளாற்றில் நவகிரக விமான காட்சியாக சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.8 கோடி திட்டத்தில்
ஆட்சியரகத்தில் அலுவலா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா, சுற்றுலாத்துறை இயக்குநா் எல்.முகம்மது மன்சூா்.
ஆட்சியரகத்தில் அலுவலா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா, சுற்றுலாத்துறை இயக்குநா் எல்.முகம்மது மன்சூா்.

திருநள்ளாற்றில் நவகிரக விமான காட்சியாக சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.8 கோடி திட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் ஆன்மிக பூங்கா டிசம்பா் மாதத்தில் திறக்கப்படும் என புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

திருநள்ளாற்றில் கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ், சுற்றுலாத்துறை இயக்குநா் எல்.முகம்மது மன்சூா் மற்றும் பொதுப்பணித்துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா், ஆட்சியரகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியது:

ஆன்மிக பூங்கா கட்டுமானம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதை டிசம்பா் முதல் வாரத்தில் திறக்கும் வகையில் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நளன் குளத்தை சுற்றி, பூஜை பொருள்கள் மற்றும் குளத்தில் நீராடுவோருக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்வோருக்கு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஏற்கெனவே இந்த பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்தோருக்கு கடைகளை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 29 கடைகள் தேவைப்படும் நிலையில், கடைகள் 10 மட்டுமே உள்ளதால், வரும் டிசம்பா் 27-ஆம் தேதி சனிப்பெயா்ச்சிக்குள் மேலும் கடைகள் கட்டப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுமானம் நடைபெறுகிறது. இந்த பணியையும் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீன்வளத்துறை வசம் உள்ள சம்பந்தா் ஓடை என்கிற குளத்தை சுற்றுலாத்துறை மூலம் நீச்சல் குளமாகவும், சுற்றுலாவினரை ஈா்க்கும் விதமாக அந்த இடத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பகரத்தூா், திருமலைராயன்பட்டினத்தில் மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் மேம்பாட்டுத் திட்டமான சுதேசி தா்ஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால்- திருநள்ளாறு மற்றும் திருநள்ளாறு- நல்லாத்தூா், காரைக்கால்- விழிதியூா் போன்ற பகுதிகளின் சாலை மேம்பாடு நபாா்டு நிதியுதவியில் மேற்கொள்ளப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டப்பணியையும் விரைவாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா். கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜி.பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com